ஜெ. வழக்கின் மேல்முறையீட்டு சூத்திரதாரி ஆச்சாரியா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
பெங்களூர்: ஜெயலலிதா அப்பீல் மனுவின் சூத்திரதாரி பி.வி.ஆச்சாரியா இப்போது என்ன செய்து கொண்டுள்ளார் தெரியுமா? டெல்லியிலா அல்லது பெங்களூரிலா எங்கு அவர் பிசியாக உள்ளார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளதா.. அவர் இரண்டு இடங்களிலும் இல்லையாம்.
ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. மேல்முறையீடு செய்ய கர்நாடக அமைச்சரவை கடந்த 1ம் தேதி பச்சைக்கொடி காட்டியது முதல் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா, தனது டீமுடன் தொடர்ந்து தீவிர பணியில் ஈடுபட்டு வந்தார்.

சுமார் 2400 பக்கங்கள் கொண்ட மேல்முறையீடு மனுவை இந்த டீம் தயாரித்துள்ளது. ஓய்வு உறக்கம் இல்லாமல்.
இந்நிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் சார்ந்த வழக்குகளுக்கு ஆஜராகும், வழக்கறிஞர், ஜோசப் அரிஸ்டாடில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மேல்முறையீடு மனுவில், கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பில் பெரும் தவறுகள் நடந்துள்ளதால், ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவும், தீர்ப்புக்கு தடை விதிக்கவும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவின் சூத்திரதாரியான ஆச்சாரியாவிடம் சென்று மனு குறித்து மேலதிக தகவலை அறிய பத்திரிகையாளர்கள் முற்பட்டபோதுதான், அவர் பெங்களூருவில் இல்லாதது தெரியவந்தது.
ஆச்சாரியா தற்போது தனது சொந்த ஊரான உடுப்பி மாவட்டம், பனியூரில் குடும்பத்தோடு உள்ளாராம். மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டமான அங்கு தற்போது பருவமழை கொட்டி வருகிறது. குடும்பத்தோடு மழையை ரசித்தபடி உள்ளார் ஆச்சாரியா. அவர் 4 நாட்களுக்கு முன்பே சொந்த ஊர் சென்றுவிட்டாராம். எனவே அதற்கு முன்பே மேல்முறையீடு மனு தயாரிக்கப்பட்டு ரெடி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications