பிரிவினையை எதிர்க்க மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: ஜெ.

காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத மதசார்பற்ற கட்சிகள் மற்றும் இடது சாரி கட்சிகள் இணைந்து புதிய அணி ஒன்றை டெல்லியில் தொடங்கி உள்ளனர்.
லோக்சபா 3-வது அணி அமைக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக இதில் 17 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க. இடது சாரி கட்சிகள், சமாஜ்வாடி, பிஜு ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், அசாம் கனபரிசத், ஜார்கண்ட் விகாஸ் மோர்சா, பார்வர்டு பிளாக் இதில் பங்கேற்றன.
அ.தி.மு.க. சார்பில் பங்கேற்ற தம்பித்துரை எம்.பி. முதல்வர் ஜெயலலிதாவின் உரையை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் மதச்சார்பற்ற சிந்தனை இன்று நேற்றைக்கு பிறந்ததல்ல. அது நம் நாட்டின் பாரம்பரிய கலாசாரமாக காலங்காலமாக தழைத்து வந்துள்ளது. எல்லா மதங்களையும், வெவ்வேறு வாழ்வியல் முறைகளையும் கொண்டதாக நமது கலாசாரம் இருந்ததை வேதங்கள் உணர்த்துகிறது.
1857-ம் ஆண்டுகளில் நம் நாட்டுக்குள் ஊடுருவி ஆதிக்கம் செலுத்திய வெளி நாட்டவர்களை இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்து எதிர்த்து போராடினார்கள். அத்தகைய ஒற்றுமை நீடிக்க நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
மதத்தின் பெயரால் பிரிவினையை தூண்ட கூடாது என்று இந்திய அரசியலமைப்பு பிரிவுகள் வலியுறுத்துகின்றன. அதை பேணிக்காக்க வேண்டியது நமது கடமையாகும்.
மதத்தின் பெயரால் நடத்தப்படும் பிரிவினை வாதத்தையும், பதற்றத்தையும் மதச்சார்பற்ற சக்திகள் எதிர்க்க வேண்டும்.
ஆனால் அண்மை காலங்களாக மதத்தின் பெயரால் அபாயகரமான தடங்கல்களை நாடு எதிர் கொண்டு வருகிறது. வகுப்பு வாத பதற்றமும், மதத்தின் பெயரால் நடத்தப்படும் அரசியலும் அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை நெருக்குதல்களுக்கும் ஒவ்வொரு முறை அடி பணிகிறது.
இதனால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக இரு குழுக்களிலும் ஆயுதம் ஏந்தி போராடும் நிலை ஏற்படுகிறது.
மேலும் மனித உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதிப்பு நேருகிறது. மதச்சார்பற்ற நிலை என்பது சமூகத்தின் ஒரு தரப்பு சமூகத்தை திருப்திபடுத்த மற்றொரு தரப்பை கீழே போட்டு நசுக்குவது அல்ல. அனைத்து தரப்புக்கும் அர்த்தமுள்ள சமமான சமூக பொருளாதார வளர்ச்சியை உருவாக்கி தருவதுதான் உண்மையான மதச்சார்பற்ற நிலையாகும். அதை தமிழக அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது என்பதை பெருமைபட கூறிக் கொள்கிறோம்.
தீவிர காவல் கண்காணிப்பு முன்கூட்டியே பதற்றமான நிலைமையை கண்டறிந்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுப்பது போன்றவற்றில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அதனால் வகுப்புவாத பதற்றங்கள் ஏற்படாமல் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்படுகிறது.
சமூக பாதுகாப்பு திட்டங்கள், ஹஜ்ஜெருசலேம், முக்திநாத், மான சரோவர் போன்ற புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு தேவையான வசதிகளையும், வாய்ப்புகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.
பல மதங்கள், கலாசாரங்கள், மொழிகள், இனங்கள் கொண்ட போதும் கடந்த காலங்களை போலவே எதிர்காலத்திலும் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் நாடாக திகழும்.
அதை வலியுறுத்தும் அரசியலமைப்பின் தூணாக விளங்கும் மதச்சார்பற்ற நிலையை நாம் தொடர்ந்து கடைபிடிப்போம்.
பரஸ்பர மதிப்பு, பேச்சு வார்த்தை சகிப்பு தன்மை ஆகியவற்றுடன் நாம் ஒன்றாக இருப்போம்.
இந்த உள்ள உறுதியுடன் நாம் செயல்பட்டால் தன்னலத்துடன் அரசியல் பதற்றம், வன்முறை, பிரிவினையை ஊக்குவிக்கும் சக்திகளை வீழ்த்துவோம்.
இவ்வாறு ஜெயலலிதாவின் கருத்தை தம்பித்துரை வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications