ஜெ.வை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்- வக்கீல் நாகேஸ்வரராவ் வாதம்
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை (நீதிபதி குமாரசாமி) உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதிட்டார்.
ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின் போது கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் தமது வாதங்களை முன்வைத்தனர். சொத்து குவிப்பு வழக்கின் முதல் புகார்தாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமியும் தமது இறுதி வாதத்தை முன்வைத்தார்.

அன்பழகன் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தமது இறுதிவாதங்களை முன்வைத்து வருகிறார். ஜெயலலிதாவின் சொத்துகள் மிகையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன என அவர் தமது வாதத்தில் சுட்டிக்காட்டினார்.
இன்றும் நாகேஸ்வரராவ் தமது வாதங்களைத் தொடர்ந்தார். இன்று நாகேஸ்வரராவ் முன்வைத்த வாதம்:
கர்நாடகா உயர்நீதிமன்றம் விரிவாக பரிசீலித்த பின்னரே ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை மிகையாக மதிப்பீடு செய்திருந்த ஜெயலலிதாவின் சொத்துகளை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி (குமாரசாமி) சரியாக மதிப்பீடு செய்துள்ளார்.
கர்நாடகா உயர்நீதிமன்றத் தீர்ப்பில் குறுக்கீடு செய்வதற்கு எந்த ஒரு காரணமுமே இல்லை. அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்த பின்னரே விடுதலை செய்யும் தீர்ப்பை கர்நாடகா உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
ஜெயலலிதா மற்றவர்களின் சொத்துகளுக்கும் விளக்கம் தர வேண்டும் என அரசுத் தரப்பு கூறுவது தவறானது. பெங்களூர் விசாரணை நீதிமன்ற (நீதிபதி குன்ஹா) தீர்ப்பு மிகவும் தவறானது. இத்தனைக்கும் ரூ100 கோடி அபராதம் விதித்தது கீழ் நீதிமன்றம். வருமான வரி தீர்ப்பாயம் முறையற்ற சொத்துகள் ஏதும் இல்லை தீர்ப்பளித்ததை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
சொத்து குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகே அனைத்து வருமான வரி கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. நமது எம்ஜிஆர் நாளிதழ் வருமான வரி கணக்கு மட்டும்தான் அப்போது தாக்கல் செய்யப்படவில்லை.
இவ்வாறு நாகேஸ்வரராவ் வாதிட்டார்.
தம்முடைய வாதங்களை நாளையுடன் நிறைவு செய்வதாக நீதிபதிகளிடம் நாகேஸ்வரராவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications