ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் திங்கள்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடகம் மேல்முறையீடு
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் திங்கள்கிழமை கர்நாடகம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியாவும் இதை உறுதி செய்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை கர்நாடக ஹைகோர்ட் கடந்த மாதம் 11ம் தேதி அளித்த தீர்ப்பில் தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா குற்றம் செய்யவில்லை என்று ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடக அரசு முடிவு செய்தது. அமைச்சரவையும் இம்முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மேல்முறையீட்டின்போது சுப்ரீம்கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியா, சந்தேஷ் சவுட்டா ஆகிய மூத்த வழக்கறிஞர்களை கர்நாடக அரசு நியமித்தது.
இந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் கோடை விடுமுறை முடிந்து வழக்கமான அலுவல்கள் ஜூலை முதல் வாரம் தொடங்க உள்ளன. எனவே, அவசரமாக மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஆச்சாரியா டீம் முடிவு செய்து பொறுமையாக மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வந்தது. இந்த தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் வரும் திங்கள்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைகோர்ட் தீர்ப்பிலுள்ள குளறுபடிகளை சுட்டிக் காட்டி, ஜெயலலிதாவை மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தி்ல் இருந்து தகுதி நீக்கம் செய்ய கர்நாடகா கேட்க உள்ளது. இந்த கோரிக்கை சுப்ரீம்கோர்ட்டால் ஏற்கப்பட்டால், ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து இறங்க வேண்டிவரும். மேலும், 27ம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் அவர் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும்.
இதுகுறித்து ஆச்சாரியா கூறுகையில், "தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து நாங்கள் தயாரித்துள்ள மேல்முறையீடு மனு ஓரிரு நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications