ஜார்க்கண்ட் தேர்தல்.. பாஜகவிடம் 12 தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கும் நிதிஷ்குமாரின் ஜேடியூ!
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியும் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடியூவுக்கு 12 சட்டசபை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் சில ஆண்டுகளுக்கு முன்னர் போட்டியிட்டு எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் பெற்றிருந்த கட்சிதான் ஜேடியூ.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஐக்கிய ஜனதா தளத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், மூத்த தலைவர் சஞ்சய் குமார் ஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஜேடியூ வெளியிட்ட அறிக்கையில், ஜார்க்கன்ட் சட்டசபையில் எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் முன்னர் பெற்றிருந்தோம். ஆகையால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் இந்த முறை ஜார்க்கண்ட் தேர்தலில் ஜேடியூ போட்டியிட முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் ஒன்றிய கட்சி, லோக் ஜனசக்தி-ராம்விலாஸ் பஸ்வான், ஜேடியூ ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஜேடியூ 11, 12 தொகுதிகளை கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தங்களது கட்சியும் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்காக செப்டம்பர் 19-ந் தேதி முதல் தொடர்ச்சியான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஜேடியூ ஏற்பாடு செய்துள்ளது. ஜாம்ஷெட்பூர் கிழக்கில் நடைபெறும் ஜார்க்கண்ட் மாநில ஜேடியூ மாநாட்டில் பீகார் முதல்வரும் கட்சித் தலைவருமான நிதிஷ்குமாரும் பங்கேற்க உள்ளார்.
ஜேடியூவுக்கு ஜார்க்கண்ட் தேர்தலில் மீண்டும் போட்டியிடலாம் என நம்பிக்கைக் கொடுத்ததே மூத்த தலைவர் சர்யூ ராய்தான். 2019 சட்டசபை தேர்தலில் பாஜகவில் இருந்து விலகி மாஜி முதல்வரான பாஜகவின் ரகுபர்தாஸுக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்றவர் சர்யூ ராய். ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான சர்யூ ராயின் வருகைதான் ஜேடியூவுக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது என்கின்றனர் அக்கட்சித் தலைவர்கள்.
ஜார்க்கண்ட் மாநிலம் பீகாரில் இருந்து உருவாக்கப்பட்ட பின்னர் 2005-ம் ஆண்டு முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஜேடியூ கட்சி 18 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் வென்றது. பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியிலும் ஜேடியூவுக்கு இடம் தரப்பட்டது.
ஆனால் 2009-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 14 இடங்களில் போட்டியிட்ட ஜேடியூவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. 2014-ல் 11 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு இடமும் கூட வெற்றி பெறவும் இல்லை. இதனால் ஜேடியூவின் இருப்பே ஜார்க்கண்ட் மாநிலத்தில் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications