பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை! பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனிடம் விசாரணை! ஜார்க்கண்டில் சலசலப்பு
ராஞ்சி: பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது பிடி இறுகப்பட்டு வரும் நிலையில், இன்று அவரது வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனையடுத்து அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி கொடுத்தது.

இப்படி இருக்கையில், எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வை முன்கூட்டியே கணித்த சோரன், தானே முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டமன்றத்தில் நடத்தினார். இதில் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் அவரது ஆட்சி தப்பியது. இருப்பினும், வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை 9 முறை சம்மன்களை அனுப்பியிருந்தது. இதில், கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி 7வது முறையாக அனுப்பப்பட்ட சம்மன்தான் பெரும் கவனத்தை பெற்றிருந்தது.
அதாவது, "இதுவரை நாங்கள் அனுப்பிய சம்மனுக்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. எனவே தங்களுக்கு தோதான நேரத்தையும், இடத்தையும் சொல்லுங்கள் அங்கு விசாரணை வைத்துக்கொள்ளலாம்" என்று கூறியிருந்தது. இதற்கு பதிலளித்திருந்த சோரன், "ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்க நடக்கும் சதி இது. ஏற்கெனவே எனது சொத்து விவரங்களை நான் தாக்கல் செய்திருக்கிறேன்" என்று அமலாக்கத்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும், சோரானுக்கு நெருக்கமானவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். நெருக்கமானவர்கள் லிஸ்டில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.
எனவே சோரன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் உருவானது. மறுபுறம் ஆட்சியை காப்பாற்ற தனது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்கவும் அவர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. நேற்று ஹேமந்த் சோரனுக்கு சொந்தமான பிஎம்டபிள்யூ சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.36 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதேபோல கடந்த 29ம் தேதி சோரன் டெல்லியிலிருந்த போது அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் அதன் பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் டெல்லியிலிருந்து ஜார்க்கண்டிற்கு காரிலேயே வந்திருக்கிறார். இந்நிலையில் இன்று அவரது வீட்டில் வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த ஹேமந்த் சோரனின் வீட்டை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications