என்னை கைது செய்தது சட்ட விரோதம்.. ஜார்க்கண்ட் நீதிமன்றத்தை நாடிய ஹேமந்த் சோரன்.. வெளியான உத்தரவு
ராஞ்சி: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து சோரன் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இது குறித்து பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா+காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனையடுத்து அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி கொடுத்தது.

ஒரு பக்கம் எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் தீவிரமடைய மறுபக்கம், அமலாக்கத்துறையும் தனது பிடியை இறுக்கியது. வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் மீது சம்மன்களை அனுப்பி தள்ளியது அமலாக்கத்துறை. தொடர்ந்து 7 முறை சம்மன் அனுப்பி பார்த்த அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி அதிரடியாக அவரது வீட்டில் நுழைந்து விசாரணையை தொடங்கியது. சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் மீண்டும் 2 சம்மன்கள் அனுப்பப்பட்டன.
இதற்கிடையில் சோரன் கடந்த 27ம் தேதி டெல்லி சென்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் வந்திருக்கும் சோரனை லாக் செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டது. ஆனால், டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டில் பணியாளர்களை தவிர யாரும் இல்லை. எனவே ஏமாற்றமடைந்த அமலாக்கத்துறை உடனடியாக விமான நிலையங்களை உஷார்படுத்தியது. இதற்கிடையில், ஹேமந்த் சோரனை காணவில்லை, தலைமறைவாகிவிட்டார் என பாஜகவும் செய்திகளை பரப்ப தொடங்கிவிட்டது.
சோரன் சுமார் 1,250 கி.மீ தொலைவுக்கு காரிலேயே பயணித்து ஜார்க்கண்ட் வந்து சேர்ந்திருக்கிறார். அடுத்த நாள் காலை தனது சகாக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்து அமலாக்கத்துறைக்கும், பாஜகவுக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சோரனை கைது செய்தது. தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க புறப்பட்ட சோரனை, அமலாக்கத்துறை தனது காரிலேயே அழைத்து சென்று, ராஜினாமா கடிதத்தை கொடுக்க செய்திருக்கிறது.
இந்நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.
பாஜகவுடன் நெருங்கிய தொடர்பை வைத்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கிறது, அதேபோல மகாராஷ்டிராவில் ஆட்சியிலிருக்கும் சிவசேனா-பாஜக கூட்டணியின் துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மீது பிரதமர் நரேந்திர மோடியே நேடியாக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். இவர்களையெல்லாம் விசாரணைக்கு அழைக்காத, சம்மன் அனுப்பாத அமலாக்கத்துறை இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்களை மட்டும் குறிவைப்பதாக எதிரக்கட்சிகள் மத்திய அரசு மீது கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications