இந்தியாவுக்கு எதிராக கன்யாகுமார் பேசியதாக வெளியானது ஜோடிக்கப்பட்ட வீடியோ! திடுக்கிடும் தகவல்கள்
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தலைவர் கன்யா குமார் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை முழங்கவில்லை என்றும், அதுபோன்ற முழக்கம் ஒலிக்கும் வீடியோ போலியாக ஜோடிக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.
கன்யாகுமார் தனது உரையில், பிராமணியத்திற்கு எதிராக விடுதலை, சங்பரிவாருக்கு எதிராக விடுதலை, ஆர்எஸ்எஸ்சுக்கு எதிராக விடுதலை, மனு தர்மத்திற்கு எதிராக விடுதலை என்றெல்லாம் கோஷமிட்டுள்ளார். அதில் விடுதலை என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை அதில் சொருகியுள்ளனர் விஷமிகள். இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லை. இதை தீவிர இந்துத்துவா சக்திகள் தான் செய்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
நாடு முழுவதும் தற்போது பற்றி எரியும் பிரச்சினை, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளும் அதைத்தொடர்ந்த கைது நடவடிக்கைகளும்தான்.
மாணவர் அமைப்பு, சங்கங்கள், விவாதங்களுக்கு பெயர் பெற்று விளங்குவது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். இங்கு அவ்வப்போது மாணவர் அமைப்பினர் செமினார்கள் நடத்துவது வழக்கம். இதேபோல கடந்த 9ம் தேதி, ஒரு செமினார் நடத்த அனுமதி கேட்டுள்ளனர் மாணவர் அமைப்பினர்.

போஸ்ட் ஆபீஸ் செமினார்
பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையிடம் அளித்துள்ள தகவல்: 'அஞ்சல் அலுவலகங்கள் இல்லாமல், இந்த நாடு எப்படி இருக்கும்' என்ற தலைப்பில் விவாதம் நடத்த அனுமதிக்குமாறு, 4 மாணவர் பிரதிநிதிகள் எங்களிடம் அனுமதி கேட்டனர். பிப்ரவரி 9ம் தேதி மாலை 5 மணிக்கு, நிகழ்ச்சி நடப்பதாக கூறினர். நாங்களும் அனுமதியளித்தோம்.

பேனர்கள் வேறு
ஆனால், மாணவர்கள் ஒட்டியிருந்த போஸ்டர்கள், பேனர்களில், 'அப்சல் குரு, மக்பூல்பட்டிற்கு எதிரான நீதி கொலை, கஷ்டப்படும் காஷ்மீர் மக்களுக்கு துணை நிற்பது' என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. தகவல் அறிந்ததும், துணை வேந்தர் தலைமையில் பதிவாளர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

தடை விதித்த பல்கலை.
அக்கூட்டத்தில், மாணவர்கள் நடத்துவதாக அறிவித்துள்ள செமினாருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்படியிருந்தும், பல்கலை. நிர்வாகத்தினரின் உத்தரவை மீறி, கூட்டத்தை மாணவர்கள் நடத்தியுள்ளனர்.

போலீசில் புகார்
கூட்டம் நடந்த மறுதினம், பல்கலை. விசாரணை குழு விசாரணை நடத்தி, கூட்டத்தை நடத்திய 8 மாணவர்களை பல்கலை.யில் இருந்து நீக்குவது என அறிவித்தது. பிப்ரவரி 11ம் தேதி டெல்லி போலீசாரை பல்கலை. சார்பில் அணுகி, 9ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான கோஷம் எழுப்பப்பட்டுள்ளது என புகார் தரப்பட்டது. இவ்வாறு நிர்வாகம் கூறியுள்ளது.

அடையாளம் தெரியாத மாணவர்கள்
அதாவது, 9ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், பாகிஸ்தான் வாழ்க என்றும், அப்சல் குருவிற்கு ஆதரவாகவும் கூட்டத்தில் இருந்த சில மாணவர்கள் கோஷமிட்டுள்ளனர். இதற்கு கன்யா குமார் கண்டனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

2 நாட்கள் கழித்து
இந்நிலையில், 11ம் தேதி நடந்த கூட்டத்தில், கன்யா குமார் பேசியுள்ளார். அந்த கூட்டத்தில், இந்தியாவிடமிருந்து விடுதலை என்ற வார்த்தையை கன்யாகுமார் கூறியதாகவும், அதற்கு கூட்டத்தினர், விடுதலை வேண்டும்.. விடுதலை வேண்டும்.. என்று கோஷமிட்டதாகவும் ஒரு வீடியோ சமூக தளங்களில் சுற்றி வந்தது. சில ஆங்கில மற்றும் ஹிந்தி சேனல்கள் அதை ஒளிபரப்பின.

தேசத்துரோகம்
இந்நிலையில்தான், இந்தியாவுக்கு எதிரான கோஷத்திற்காகவும், 9ம் தேதி பல்கலையில் நடந்த கூட்டத்தில் அப்சல் குரு ஆதரவு கோஷம் சில மாணவர்களால் எழுப்பப்பட்ட குற்றத்திற்காகவும், கன்யா குமார் தேசதுரோக வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை அடிப்படையாக வைத்து குமார் ஒரு தேச துரோகி என்று சில ஆங்கில டிவி சேனல்களின் ஆங்கர்கள் பட்டமே சூட்டிவிட்டனர்.

வீடியோ முக்கிய ஆதாரம்
கன்யா குமார், இந்தியாவிடமிருந்து விடுதலை வேண்டும் என்று கூறி கோஷமிடும் இந்த வீடியோ அடிப்படையில்தான், வக்கீல்கள் சிலர் கோபத்தில் கோர்ட் வளாகத்திலேயே கன்யாகுமாரை தாக்கியுள்ளனர். அவரை தேச துரோகி என்று அழைக்க அந்த வீடியோ முக்கிய ஆதாரமாக இருந்தது.

போலி வீடியோ
இந்நிலையில் இந்தியா டுடே, ஏபிபி ஆகிய டிவி சேனல்கள், புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளன. அதில், 11ம்தேதி கன்யாகுமார் இந்தியாவுக்கு எதிராக விடுதலை வேண்டும் என்று கோஷமிட்டதாக வெளியான வீடியோ போலி என்பதற்கான ஆதாரம் உள்ளது.

ஆடியோ எடிட்டிங்
9ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சில மாணவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டனர். அந்த ஆடியோவை எடுத்து, 11ம் தேதி கன்யாகுமார் பேசிய வீடியோவில் இணைத்துள்ளனர் சில விஷமிகள் என்கிறது அந்த இரு டிவி சேனல்களும்.

இது வேறு விடுதலை
ஏனெனில், கன்யாகுமார் 11ம் தேதி தனது உரையின்போது, பிராமணியத்திற்கு எதிராக விடுதலை, சங்பரிவாருக்கு எதிராக விடுதலை, ஆர்எஸ்எஸ்சுக்கு எதிராக விடுதலை, மனு தர்மத்திற்கு எதிராக விடுதலை என்றெல்லாம் கோஷமிட்டுள்ளார். அதில் விடுதலை என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை அதில் சொருகியுள்ளனர் விஷமிகள்.

கன்யாகுமார் நிரபராதி?
இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இதுவரை அவரை தேசத்துரோகி என்று அழைத்து வந்த சில டிவி சேனல்கள் வாயை மூடியுள்ளன. டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கன்யாகுமார், தான் இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அம்பேத்கர் மீது மரியாதை வைத்துள்ளதாகவும், இந்தியாவுக்கு எதிராக நடக்கவில்லை என்றும் கூறியிருந்தார். தற்போது வெளியாகியுள்ள வீடியோ அவரது பேச்சை உண்மை என நம்பவைக்கும் அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.,

தேசிய கொடி
வீடியோ சர்ச்சை ஒருபக்கம் அனல் பறக்கும் நிலையில், மத்திய மனித வள அமைச்சகம், திடீரென தேசிய கொடி ஏற்றுவதை 46 மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் கட்டாயமாக்கி நேற்று அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.
மொத்தமுள்ள 46 மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த உத்தரவை பிறப்பித்தார். தேச விரோத செயலில் ஆரம்பித்த சர்ச்சை தேசிய கொடியில் வந்து நிற்கிறது.












Click it and Unblock the Notifications