சுயநினைவில்லாத நோயாளியை சரமாரியாக அடித்த டாக்டர்: தீயாக பரவும் வீடியோ
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஜூனியர் டாக்டர் ஒருவர் சுயநினைவின்றி இருந்த ஆண் நோயாளியை அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரிபவர் டாக்டர் தவ்ஹீத் அகமது. ஜூனியர் டாக்டரான அவர் கடந்த வியாழக்கிழமை இரவு மருத்துவமனையில் சுயநினைவில்லாமல் இருந்த ஆண் நோயாளி ஒருவரை திரும்பத் திரும்ப அடித்துள்ளார். அவருடன் சேர்ந்து வேறு ஒரு டாக்டரும் அந்த நோயாளியை அடித்துள்ளார்.

இதை பார்த்த ஒருவர் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுவிட்டார். அந்த வீடியோ தீயாக பரவி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து டாக்டர் அகமது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 48 மணிநேரத்தில் அறிக்கை சமர்பிக்க மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூத்த அதிகாரி எஸ்.சி. திவாரி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் அகமது அந்த நோயாளியை சுயநினைவுக்கு கொண்டு வரவே அடித்தார் என்று கூறப்படுகிறது.
சுயநினைவில்லாத நோயாளியை டாக்டர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications