மம்தா வீட்டில் பேச்சுவார்த்தை நடத்திய பயிற்சி மருத்துவர்கள்! என்ன முடிவு? போராட்டம் தொடருமா?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 5-வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று, பயிற்சி மருத்துவர்கள் முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு சென்றனர். சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த, 31 வயதான பயிற்சி பெண் டாக்டரை, கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

mamata banerjee west bengal kolkata

இந்த வழக்கை, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நீதி வேண்டி அம்மாநில பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் கடந்த 34 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு மருத்துவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், இந்த விவகாரத்தில் உரிய நீதியும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யாமல் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

போராட்டம் நடத்தும் பயிற்சி மருத்துவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்தது. ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை.

கடந்த 14 ஆம் தேதி, மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்ற மம்தா அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். உங்களுக்கு எதிராக நான் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டேன் என்று கனிவோடு பேசினார் மம்தா. இதையடுத்து போராடி வரும் மருத்துவர்கள், முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க அவரது இல்லத்துக்கு முன்பாகச் சென்றனர்.

ஆனால், சந்திப்பை நேரலையாக பதிவு செய்வதை மம்தா ஏற்காததால் அவர்கள் மம்தா வீட்டுக்கு வெளியே மழையில் நனைந்தபடி காத்திருந்தனர். என்னை சந்திக்க விருப்பம் இல்லாவிட்டாலும் உள்ளே வந்து ஒரு கப் டீயாவது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார் மம்தா பானர்ஜி. ஆனால், பயிற்சி மருத்துவர்கள் சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க அரசு, போராடி வரும் பயிற்சி மருத்துவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது. போராட்டக்குழுவினருக்கு, மேற்கு வங்க அரசின் தலைமை செயலாளர் மனோஜ் பான்ட் அனுப்பிய இமெயிலில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி டாக்டர்கள் தங்களது பணியை துவக்க வேண்டும். முதல்வருக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு அழைப்பது இது 5வது முறை மற்றும் கடைசி முறை. இதற்கு முன்பு நாம் பேசியபடி, முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது. ஆனால், பேசப்பட்டது குறித்து பதிவு செய்யப்பட்டு இரு தரப்பினரின் ஒப்புதல் பெறப்படும். இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்கள் குழுவினர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடன் பேச்சுவார்த்தை நடத்த அவரது வீட்டுக்குச் சென்றனர். சுமார் 30 பயிற்சி மருத்துவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பயிற்சி மருத்துவர்கள், தங்களது 5 கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றுவதாக உறுதி அளித்தால் தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என திட்டவட்டமாக கூறி உள்ளனர்.

சுமார் 2 மணி நேரம் முதல்வர் மம்தா பானர்ஜி - பயிற்சி மருத்துவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை முடிந்து, மருத்துவர்கள் குழுவினர் மம்தா இல்லத்தில் இருந்து கிளம்பினர். ஜூனியர் டாக்டர்கள் மீண்டும் போராட்டம் நடைபெறும் ஸ்வஸ்திய பவனுக்கு திரும்பியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையின் "மினிட்ஸ்" தொகுக்கப்படும் நிலையில் இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. பயிற்சி மருத்துவர்கள் குழுவினர் தங்களுக்குள் ஆலோசித்து தங்கள் தரப்பு முடிவை அறிவிப்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+