பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு... பெரும்பான்மையை நிரூபித்தார் அருணாசல் முதல்வர் கலிகோ புல்!
இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் புதிதாக ஆட்சியமைத்துள்ள முதல்வர் கலிகோ புல், சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.
அருணாசலப் பிரதேசத்தில் நபம் துகி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. ஆனால், நபம்துகிக்கு எதிராக அதிருப்தி எல்.எல்.ஏ.க்கள் 14 பேர் போர்க்கொடி உயர்த்தினர். இவர்கள் பாஜக மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அதிருப்தி தலைவர் கலிகோ புல் என்பவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர்.

இதனால் அங்கு ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 26ம் தேதி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் அது திரும்பப்பெறப்பட்டது.
இதனால் அங்கு புதிய அரசு அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் தொடர்ச்சியாக அம்மாநில புதிய முதல்வராக கலிகோ புல், கடந்த 19ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில், சட்டசபையில் 7-வது அமர்வினை நேற்று முதல் 27-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடத்த ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதனால் நேற்றே முதல்வர் கலிகோ புல் தலைமையிலான அரசு, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், முன்னாள் முதல்வர் நபம் துகியின் விசுவாசிகளாக இருந்த 8 எம்.எல்.ஏ.க்கள் கலிகோ புல்லுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார் கலிகோ.
மொத்தம் உள்ள 58 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் கலிகோ புல்லுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications