கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்கே அமோக வெற்றி - லோக்நிதி சர்வே
பெங்களூரு: கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் கனவு தகரும் என்று லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு 2வது இடமே கிடைக்கும் என்றும் தேவே கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 3வது இடம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடு உள்ளிட்ட நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் சாராம்சம்:

காங்கிரஸே வெல்லும்
காங்கிரஸ் கட்சிக்கு 49 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. பாஜகவுக்கு 27 சதவீதம் பேரும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 20 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் காங்கிரஸ் டவுன்
பெங்களூரு நகரில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு மோசமாக உள்ளது. 55 சதவீதம் பேர் காங்கிரஸ் அரசு மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 11 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்.குக்கு சிறிய நகரங்கள் ஆதரவு
அதேசமயம், காங்கிரஸ் அரசுக்கு சிறிய நகரங்களில் நல்ல ஆதரவு காணப்படுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஆகிய சமூகத்தவரிடையே காங்கிரஸுக்கு நல்ல ஆதரவு காணப்படுகிறது.

3 பிராந்தியங்களில் ஆதரவு அதிகம்
தென் கர்நாடகா, மும்பை கர்நாடகா மற்றும் ஹைதராபாத் கர்நாடகா ஆகிய 3 பிராந்தியங்களில் காங்கிரஸுக்கு நல்ல ஆதரவு உள்ளதாக இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் ஆதரவு நிலவரம்
நகரங்களில் காங்கிரஸ் ஆட்சி மீது 9 சதவீதம் திருப்தி, 59 சதவீதம் ஓரளவு திருப்தி, 19 சதவீதம் அதிருப்தி. பிற்படுத்தப்பட்டோரில் 14% திருப்தி, 49 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி, 6% அதிருப்தி.

கிராமங்களில் காங்கிரஸ் நிலை
கிராமங்களில் காங்கிரஸ் அரசு மீது 11% திருப்தி, 44% ஓரளவு திருப்தி, 37 - ஏதோ திருப்தி, 4% அதிருப்தி என்று இக்கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications