அடுத்தடுத்த சர்ச்சைகளால் ஆட்டம் காணும், கர்நாடக முதல்வர் பதவி! போட்டியில் கார்கே, கிருஷ்ணா
பெங்களூர்: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்க காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சித்தராமையா தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மூத்த காங்கிரஸ் தலைவர்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுப்பதாகவும் பதவி ஏற்ற தொடக்கத்திலேயே புகார் எழுந்தது. ஆயினும் சித்தராமையா மீது ஊழல் புகார் எதுவும் இல்லாததால் அவருடைய பதவிக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் விலை உயர்ந்த கைக்கெடிகாரம் சித்தராமையாவிடம் இருக்கும் தகவல் பகிரங்கமானது. இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து அந்த கைக்கெடிகாரத்தை அரசிடமே ஒப்படைத்து பிரச்சினைக்கு சித்தராமையா முற்றுப்புள்ளி வைத்தார்.

ஊழல் ஒழி்ப்பு
இந்த நிலையில்தான் யாருமே எதிர்பார்க்காத நிலையில் திடீரென ஊழல் தடுப்பு படையை கர்நாடக அரசு உருவாக்கியது. ஊழலை ஒழிக்கும் பணியை சிறப்பாக செய்து வரும் லோக் அயுக்தா அமைப்பு பலம் வாய்ந்ததாக உள்ள நிலையில் ஊழல் தடுப்பு படை தேவையா? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினரும் முன்வைத்தனர்.

உறுதி
சித்தராமையாவின் இந்த முடிவு லோக் அயுக்தா அமைப்பின் அதிகாரத்தை குறைக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டினர். இருப்பினும், ஊழல் தடுப்பு படையை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று சித்தராமையா திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

சித்து மகன்
இந்த விவகாரம் ஓரளவுக்கு ஓய்ந்த நிலையில் சித்தராமையா, மகன் யதீந்திரா நடத்தும் மருத்துவ பரிசோதனை நிறுவனத்தை பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்க அனுமதி வழங்கியது, பெரும் பிரச்சினையை உருவாக்கியது. இந்த பிரச்சினை காங்கிரஸ் கட்சிக்கும் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் மேலிடம் விளக்கம் கேட்டு பெற்றது.

இடைத்தேர்தல் தோல்வி
இந்த பிரச்சினை வெடித்ததால் அந்த நிறுவனத்தின் இயக்குனர் பதவியை சித்தராமையாவின் மகன் டாக்டர் யதீந்திரா ராஜினாமா செய்தார். இதோடு, சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது உள்பட பல்வேறு பிரச்சினைகளை மையமாக வைத்து சித்தராமையாவை வீழ்த்த ஆளும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிராகரிப்பு
இதற்கிடையே, சித்தராமையா டெல்லியில் சோனியா காந்தியை சந்திக்க 3 முறை அனுமதி கேட்டார். ஆனால் அவருக்கு அனுமதி நிராகரிக்கப்பட்டது. வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை வேகப்படுத்தும்படி அவருக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது.

கார்கே, கிருஷ்ணா
அதன்படி, சித்தராமையா வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோர் முதல்வர் பதவி மீது கண் வைத்து காய் நகர்த்தி வருகிறார்கள்.

பரபரப்பு
அதே நேரத்தில் சித்தராமையாவை நீக்கினால் அதனால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது. முதல்வர் சித்தராமையாவை நீக்கும் விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications