ஆமா நான் பாஜகதான்.. வாக்காளர் அட்டைக் குவியல் சிக்கிய வீட்டின் ஹவுஸ் ஓனர் பரபரப்பு பேட்டி!
கர்நாடகாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளில் பாஜகவினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளில் பாஜகவினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடையாள அட்டைகள் இருந்த வீட்டின் உரிமையாளர் பாஜக கட்சியில் உறுப்பினராக இருப்பது தெரிய வந்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை பிரச்சனை ஒன்று உருவாகி உள்ளது. நேற்று முதல் நாள் இரவு ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கொத்தாக நிறைய வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 10,000 வாக்காளர் அடையாள அட்டைகள் நேற்று முதல்நாள் ஒரு வீட்டின் அறையில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபற்றிய விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த செயலுக்கு பின்பாக காங்கிரஸ் இருக்கிறது என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏதான் இந்த மோசடியை செய்து இருக்கிறார் என்று கூறியுள்ளது. அவரை கைது செய்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்து இருந்தது.

ஆனால் காங்கிரஸ் இதில் புதிய ஆதாரத்தை வெளியிட்டு உள்ளது. அதன்படி பாஜகவின் உறுப்பினர் மஞ்சுளா நஞ்சமரி என்பவர்தான் அந்த கட்டிடத்திற்கு உரிமையாளர் என்று கூறியுள்ளது. அவர்தான் இந்த மோசடிக்கு காரணகர்த்தா என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. இதனால், அவரை கைது செய்து தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
கடைசி நேரத்தில் பாஜக இதில் திடீர் என்று பல்டி அடித்தது. அதன்படி மஞ்சுளாவை யார் என்றே தெரியாது என்று பாஜக குறிப்பிட்டது. மஞ்சுளா எங்கள் கட்சியில் உறுப்பினர் இல்லை, எங்கள் கட்சியில் உள்ள யாருமே மஞ்சுளாவுடன் அரசியல் ரீதியாக தொடர்பில் இல்லை என்று கூறியது. காங்கிரஸ் தேவையில்லாமல் பழிபோடுகிறது என்றும் குற்றச்சாட்டு வைத்து இருந்தது.
தற்போது இதில் மஞ்சுளா மற்றும் அவரது மகன் ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி, ''நாங்கள் இப்போதும் பாஜகவில்தான் இருக்கிறோம். எங்களுக்கு பாஜக கட்சியினர் எல்லோரிடத்திலும் நல்ல தொடர்பு இருக்கிறது. பாஜக உறுப்பினர்கள் ஏன் இப்படி எங்களை கைவிட்டார்கள் என்று தெரியவில்லை. பாஜக எங்களை கைவிட்டுவிட்டது.'' என்று வருத்தமாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications