நிர்மலா சீதாராமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. கிடையாதே.. கர்நாடக அமைச்சர் கடும் தாக்கு
மடிகேரி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியாக இருந்திருந்தால் மக்கள் படும் துயரம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெரிந்திருக்கும் என்று கர்நாடக அமைச்சர் சாரா மகேஷ் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பார்வையிட்டார்.
இதன்பிறகு முன்னாள் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, கர்நாடக மாநில அமைச்சர் சாரா. மகேஷ் உடன் இருந்தார் அப்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநில அரசு அதிகாரிகள் சிலர் பணிகள் குறித்து உங்களிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர், அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தலாமா என்று கேட்டார்.

கோபப்பட்ட நிர்மலா
அதற்காக, சீறிப்பாய்ந்தார் நிர்மலா சீதாராமன். உங்கள் அதிகாரிகள் முக்கியம் என்றால் எனக்கு எனது பரிவார் (முன்னாள் ராணுவ அதிகாரிகள்) முக்கியம். எனவே, நான் எனது நிகழ்ச்சி நிரல்படி தான் செல்ல முடியும் என்று தெரிவித்துவிட்டார். மீடியாக்கள் முன்னிலையில் அமைச்சருக்கு எதிராக ஆக்ரோஷமாக இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மக்கள் கஷ்டப்படும்போது இது தேவையா
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பின்னர் வெளியே பேட்டியளித்தார் சாரா மகேஷ். அப்போது அவர் கூறுகையில் "ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் மத்திய அமைச்சர் மரியாதையுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். குடகு மாவட்டம் பெரும் பேரிடரில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற விஷயங்கள் ஊதி பெரிதாக்கியிருக்க கூடாது" என்று கண்டனம் தெரிவித்தார்.

மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை
மேலும், "ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சாமானிய மக்கள் படும் கஷ்டங்கள் புரியாது. ஏழ்மை குறித்தும் அவர்களுக்கு தெரியாது. நிர்மலா சீதாராமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி கிடையாது. கர்நாடக பாஜகவால் இம்மாநிலத்தில் இருந்து நியமிக்கப்பட்ட எம்பி. எனவே அவர் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும்" இவ்வாறு அவர் கிண்டலாக தெரிவித்தார்.

நிவாரண நிதி எங்கே
மேலும் அவர் கூறுகையில், மத்திய ஆய்வுக்குழு வந்து ஆய்வு செய்து விட்டு அதன் பிறகுதான் நிவாரண நிதியை மத்திய அரசு அறிவிக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஆனால் கேரளாவில் மத்திய ஆய்வுக் குழு ஆய்வு நடத்தும் முன்பே உடனடியாக நிதி உதவி, அறிவிக்கப்பட்டது. குடகிற்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று கேள்வி எழுப்பினார்.

சித்தராமையா கண்டனம்
இதனிடையே, ஹாசன் நகரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, நிர்மலா சீதாராமன், குடகு மாவட்டத்திற்கான நிதி உதவியை அறிவித்திருக்க வேண்டும். கேரளாவில் வெள்ளச் சேதத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி குடகிலும் ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications