கொடூரம்! பொதுவெளியில் பழங்குடி பெண்ணின் ஆடை கிழிப்பு - பாஜக பிரமுகர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு
தக்சின கன்னடா: பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்ணின் ஆடையை கிழித்து தாக்கியதாக பாஜக பிரமுகர் உட்பட 9 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கர்நாடகத்தின் தக்சின கன்னடா மாவட்டம் பெல்தங்கா அருகே குருபல்லா கிராமத்தில் பாதிக்கப்பட்ட 35 வயது பெண் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அரசு ஒதுக்கிய நிலத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நிலம் தொடர்பாக அவருக்கும் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்திருக்கிறது. இதற்காக அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடந்து பாதிக்கப்பட்ட பெண் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வருவாய் துறை அதிகாரிகள் அரசு நிலத்தை அளவிட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக அப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு சென்ற பாஜக பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சென்னா கேசவா உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.
நிலத்தை அளவிடுவதற்காக சென்ற வருவாய்துறை அதிகாரிகளை மிரட்டி அங்கிருந்து விரட்டிய கும்பல், பழங்குடியின பெண், அவரது சகோதரி மற்றும் தாயை துன்புறுத்தி இருக்கின்றனர். அத்துடன் புகாரளித்த பெண்ணின் ஆடைகளை பொதுவெளியில் கிழித்து வீசி அதை வீடியோ பதிவு செய்து அத்துமீறியதுடன் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பாஜக பிரமுகர் சென்னா கேசவா (40), சந்தீப் (30), சந்தோஷ் (29), குலபி (55), சுகுனா (30), குசுமா (38), லொகய்யா (55), அனில் (35), லலிதா (40) ஆகியோர் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications