பாதியில் ஓடிப்போன கெஜ்ரிவாலையே மீண்டும் முதல்வராக களமிறக்கும் ஆம் ஆத்மி
டெல்லி: டெல்லி சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் வரப் போவது உறுதியாகி விட்டதால் கட்சிகள் மீண்டும் தேர்தல் மோதலுக்குத் தயாராகி வருகின்றன.
இந்தத் தேர்தல் வருவதற்கு மூல முதற் காரணமே ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால்தான். இவர் பாதியிலேயே பொறுப்பை விட்டு ஓடிப் போனதால்தான் குழப்பம் ஏற்பட்டு இப்போது தேர்தல் வரை வந்துள்ளது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலே மீண்டும் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆம் ஆத்மி ஆட்சி...
கடந்தாண்டு நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைக்காததால், அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக அங்கு ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. எனவே, காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சி அமைத்தது.
ராஜினாமா...
முதல்வராக அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். ஆனால், ஒன்றரை மாதங்களில் தனது பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.
தவறான முடிவு...
கட்சி ஆரம்பித்த ஓர் ஆண்டில் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஆம் ஆத்மி, இந்த திடீர் ராஜினாமா நடவடிக்கையால் அதிருப்திக்கு ஆளானது. காலந்தாழ்த்தியே தனது ராஜினாமா முடிவு முட்டாள்தனமானது என கெஜ்ரிவால் உணர்ந்தார்.
தாக்குதல்...
இதனால், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற கெஜ்ரிவால் சொந்தக் கட்சியினர் மற்றும் பொது மக்கள் பல இடங்களில் தாக்குதலுக்கு ஆளானார்.
மறுதேர்தல்...
அதனைத் தொடர்ந்து டெல்லி சட்டசபையைக் கலைத்து விட்டு, மீண்டும் அங்கு தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் கெஜ்ரிவால். இந்த வழக்கு விசாரணையின் போது அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசித்து முடிவு எடுப்பதாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் அறிக்கை...
அதன்படி, இது தொடர்பாக நேற்று பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் நஜீப் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் ஆட்சி அமைக்க விருப்பமில்லை, மறு தேர்தல் நடத்தலாம் என தெரிவித்ததையடுத்து, இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அவர் அறிக்கை ஒன்றை அனுப்பினார்.
ஒப்புதல்...
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் டெல்லி சட்டசபையைக் கலைக்க அனுமதியும் அளிக்கப் பட்டது. எனவே, விரைவில் தேர்தல் ஆணையம் முறைப்படி டெல்லி சட்டசபைத் தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்...
இந்நிலையில், ஆம் ஆத்மி சார்பில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலே களமிறக்கப்படுவதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் மோதல்...
மேலும், தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள காங்கிரசின் பங்களிப்பு இந்தத் தேர்தலில் எப்படி இருக்கும் உறுதிபட கூற இயலாத சூழ்நிலையில், இத்தேர்தலும் பாஜக - ஆம் ஆத்மி மோதிக் கொள்வதாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications