"இதெல்லாம் எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா.." பினராயி விஜயனை சீண்டும் கேரள ஆளுநர் ஆரிப் கான்
கொச்சி: கேரளாவில் மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிப் கானுக்கும் இடையேயான மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், அவர் மாநில அரசை சாடியுள்ளார்.
நாட்டில் பாஜக இல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பல்வேறு மாநிலங்களிலும் இப்போது ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே சுமுகமான உறவு என்பது இல்லை.
ஆளுநர்களுடன் மோதல் போக்கே இந்த மாநிலங்களில் இருந்து வருகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு உள்ளது.

கேரளா
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தொடர்ச்சியாக பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசைக் கடுமையாகச் சாடி வருகிறார். இதற்கிடையே பஞ்சாபை ஓவர்டேக் செய்து கேரளா நாட்டின் போதைப் பொருள் தலைநகராக மாறுவதாக ஆரிப் முகமது கான் விமர்சித்து உள்ளார். மாநிலத்தின் முக்கிய வருவாயாக லாட்டரி மற்றும் மதுபானம் இருப்பதைப் பார்த்து வெட்கப்படுவதாகவும் அவர் கடுமையாகச் சாடினார்.

ஆரிப் கான்
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கேரள இடதுசாரி அரசுடன் ஆளுநர் ஆரிப் கான் மோதல் போக்கைகே கொண்டுள்ளார். மற்ற பகுதிகளில் மதுவுக்கு எதிராகப் பிரசாரம் நடந்து வரும் நிலையில், கேரளாவில் மட்டும் மது குடிப்பதை ஊக்குவித்து வருவதாகவும் அவர் விமர்சித்தார். கேரளாவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆரிப் கான் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

அவமானம்
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆரிப் கான், "இங்கு நமது வளர்ச்சிக்கு லாட்டரியும், மதுவும் போதும் என்று முடிவு செய்துள்ளோம். 100 சதவீத எழுத்தறிவு பெற்றுள்ள மாநிலத்தின் அவமானகரமான நிலை இது. கேரளாவின் இரண்டு முக்கிய வருவாயாக லாட்டரி மற்றும் மது விற்பனை இருப்பதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். ஏழைகள் மட்டுமே லாட்டரிகளை வாங்குகிறார்கள். அவர்களிடம் இருந்து அரசு பணத்தைக் கொள்ளையடிக்கிறது.

பஞ்சாபை ஓவர்டேக் செய்த கேரளா
பஞ்சாப் மாநிலத்தில் தான் போதைப் பொருள் பயன்பாடு அதிகம் என்பார்கள். ஆனால், பஞ்சாபையே ஓவர்டேக் செய்து போதைப்பொருள் தலைநகராகக் கேரளா உருவெடுத்து வருகிறது. ஏனெனில் இங்கு மாநிலம் மது விற்பனையை ஊக்குவிக்கிறது. மற்றவர்களுக்கு மதுவுக்கு எதிராகப் பிரசாரம் செய்தால்.. இவர்கள் மதுவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதெல்லாம் மிகப் பெரிய அவமானம்" என்றார்.

துணை வேந்தர் நியமனம்
தொடர்ந்து பல்கலைக்கழக துணை வேந்தர்களைக் கேரள அரசு நியமித்தது குறித்துப் பேசிய அவர், "உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தெளிவுபடுத்தி உள்ளது. பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களை நியமிப்பது என்பது ஆளுநர்களின் வேலை தான். இதை உச்ச நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தி விட்டது. மீண்டும் இந்த விவகாரத்தில் அவர்கள் தலையிட மாட்டார்கள் என்றே நம்புகிறேன்" என்றார்.

உச்ச நீதிமன்றம்
திருவனந்தபுரத்தில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைச் சமீபத்தில் கேரள அரசே நியமித்து இருந்தது. இது யுஜிசி விதிமுறைகளுக்கு முரணானது என்று என்று கூறி இந்த நியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து. ஆளுநருக்கு மூன்று பேரை மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும்.. ஆனால் அம்மாநில அரசு ஒரே ஒரு நபரைப் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications