ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கே 3ம் பாலின குழந்தை பிறக்கிறது... கேரள பேராசிரியரின் சர்ச்சை பேச்சு!
திருவனந்தபுரம் : ஆண்கள் போல ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கொள்ளும் ஆடை கலாச்சாரத்திற்கு பெண்கள் மாறியதன் விளைவாகவே பிறக்கும் குழந்தைகளின் தன்மையும் மாறியுள்ளதாக கேரள பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ரஜித் குமார் கலடியில் உள்ள கல்லூரி உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி வருகிறார். பெண்களின் ஆடை கலாச்சாரம் குறித்து இவர் கூறியுள்ள பிற்போக்குத் தனமான கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் ஆட்டிசம் குழந்தைகள் பிறப்பதற்கு என்ன காரணம் என்று அறிவியல் ரீதியாக தான் கண்டுபிடித்துள்ளதாக இதற்கு ரஜித் குமார் விளக்கம் கொடுத்துள்ளார். பெண்கள் தங்களது பாரம்பரியத்தை அழித்துக் கொண்டு ஆண்களைப் போல உடை அணிவதாலேயே அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் 3ம் பாலினத்தவர்களாக இருக்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.

3ம் பாலின குழந்தை ஏன் பிறக்கிறது?
ஒரு பெண் ஆணைப் போல ஆடைகள் அணிய நினைத்தால் அவருக்கு பிறக்கும் குழந்தையின் குணாதிசயம் எப்படி இருக்கும். அந்தக் குழந்தைகளை தான் 3ம் பாலினத்தவர் அல்லது ஹிஜ்ரா என்று அழைக்கிறோம். கேரளாவில் சுமார் 6 லட்சம் குழந்தைகள் 3ம் பாலினத்தவர்களாக இருக்கின்றனர் என்று ரஜித் கூறுகிறார்.

ஜீன்ஸ் அணியும் பெண்களால்
ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் வாழும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தை நல்ல நிலையில் இருக்கும். ஆனால் பெண் தன்னுடைய பெண்மைக்கான அடையாளத்தை அழித்துக் கொண்டு ஆண் போல வாழும் போது அந்த குழந்தைக்கு ஆண், பெண் என்ற இரண்டு குணாதிசயமும் தோன்றுவதாகவும், இதன் விளைவாக அந்த பெண்ணின் குழந்தை 3ம் பாலின குழந்தையாக பிறப்பதாகவும் அவர் விளக்கம் தந்துள்ளார்.

ஏன் ஆட்டிசம் குழந்தை பிறக்கிறது?
இதே போன்று வெளிநாட்டு பெண்மணி ஒருவரின் வீடியோவை போட்டுக்காட்டி இந்தப் பெண் ஜீன்ஸ் அணிந்திருந்ததால் அவருடைய இரண்டு குழந்தைகளும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஜித் கூறுகிறார். பேராசிரியர் ரஜித் குமார் இந்த கருத்துகள் அடங்கிய வீடியோவை தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இவரின் இந்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் நடவடிக்கை
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த ரஜித் குமாருக்கு கேரள சுகாதார மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஷைலஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் இனி பேராசிரியர் ரஜித் குமாரை அழைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேராசிரியரின் இந்த கருத்துக்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!