ஜெ. மறைவு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்.. டெல்லியில் போராடும் 'பெண் ராணுவம்'
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூஜா நாயர் என்ற பெண் தீவிர ஜெயலலிதா ஆதரவாளர் ஆவர். ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை எனக் கோரி போராட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் பூஜா நாயர்.
டெல்லி: மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால், அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கேரளாவை சேர்ந்த பெண்மணி போராட்டம் நடத்தினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற போது, ஜெயலலிதா குறித்த புகைப்படங்கள்,வீடியோக்கள் ஏதும் வெளியாகவில்லை, சசிகலா தவிர வெளி நபர்கள் யாருமே ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை.

டெல்லியில் போராட்டம்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூஜா நாயர் என்ற பெண் தீவிர ஜெயலலிதா ஆதரவாளர் ஆவர். அவருக்கு ஜெயலலிதா மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை எனக் கோரி போராட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் பூஜா நாயர்.

நன்றிக்கடன்
அப்போது அவர் கூறுகையில், 2014ல் ஜந்தர் மந்தரில் நடந்த ஒரு போராட்டத்தின்போது என்னை போலீசார் கடுமையாக தாக்கினர். அப்போது ஜெயலலிதா ஆதரவாளர்கள்தான் என்னை காப்பாற்றினர். அதற்கு இப்போது நன்றிக் கடன் தீர்க்கும் வகையில் தர்ணா நடத்தி வருகிறேன்.

சிபிஐ விசாரணை
ஜெயலலிதாவின் சாவில் இருக்கும் மர்மத்தை உடைக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பல்வேறு காரணங்களைக் கூறி சிலர் ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்மத்தை மூடி மறைக்கிறார்கள் என்றார்.

பெண் ராணுவம்
பூஜா நாயரின் போராட்டம் ஜந்தர் மந்தர் பகுதியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை என்றபோதிலும், என்றாவது ஒருநாள் வெளி உலகத்திற்கு எனது போராட்டம் தெரியவரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அவர். ஜெயலலிதாவின் உருவப்படத்தை கையில் ஏந்தி, அப்பகுதியில் ஊர்வலமாக வந்து கோஷமிட்டபடி இருந்தார் பூஜா நாயர். அம்மா என்றுதான் ஜெயலலிதாவை குறிப்பிட்டு தனது பேட்டியில் அவர் கூறினார். மேலும் தன்னை அவர் 'ஒரு பெண் ராணுவம்' என அழைத்துக் கொள்கிறார்.












Click it and Unblock the Notifications