கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்! நாளை பேரணி! சனிக்கிழமை முதல் பணிக்கு திரும்ப முடிவு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் பணிகளை தொடர்வோம் என பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 42 நாள் போராட்டம் முடிவுக்கு வருகிறது.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த, 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை, சிபிஐ விசாரித்து வருகிறது. ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நீதி வேண்டி அம்மாநில பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு மருத்துவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், இந்த விவகாரத்தில் உரிய நீதியும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யாமல் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
முதல்வர், பயிற்சி மருத்துவர்கள் இடையே 3 முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கே முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சனிக்கிழமை சென்று அவர்களிடம் பேசி, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து, கடந்த 16 ஆம் தேதி மீண்டும் மேற்கு வங்க அரசு சார்பில் பயிற்சி மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து காளிகாட் பகுதியிலுள்ள முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு மருத்துவ மாணவர்கள் சென்றனர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை இரவு 9 மணியளவில் நிறைவடைந்தது. பயிற்சி மருத்துவர்களின் முக்கியமான 5 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு ஏற்றுக்கொண்டது.
அதைத்தொடர்ந்து, கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் இடமாற்றம் செய்யப்பட்டார். மேற்கு வங்க மருத்துவப் பணிகள் இயக்குநர் தேபாசிஷ் ஹல்தார் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் கெளஸ்தவ் நாயக், கொல்கத்தா வடக்கு மண்டல துணை காவல் ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் நீக்கப்பட்டனர்.
தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை முடிப்பது குறித்து பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு செய்வோம் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் சனிக்கிழமை முதல் பணிகளை தொடர்வோம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆர்ஜி கர் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் நீதி கோரி நாளை (செப்டம்பர் 20) ஜூனியர் டாக்டர்கள் ஸ்வஸ்தா பவனில் இருந்து சிபிஐ அலுவலகம் வரை மாலை 3 மணிக்கு பேரணியாக செல்கின்றனர். அதைத்தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டு சனிக்கிழமை முதல் அவசர கால சேவைகளுக்காக பணிக்குத் திரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications