"வாழும் கலை" ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் 11 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக பெங்களூர் தம்பதி புகார்
பெங்களூர்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் வாழும் கலை ஆசிரமம், சுமார் 11 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பெங்களூர் அடுத்த கனகபுரா சாலையில் உள்ள அகரா என்ற பகுதியில் 1989ம் ஆண்டு கோபால கிருஷ்ணா என்பவர் 20 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அமெரிக்கவாழ் கன்னடரான இவர், இந்த நிலத்தில் ஒரு பண்ணை வீட்டையும் அமைத்துள்ளார். இவரது மனைவி ஆர்த்தி, அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் 1999ம் ஆண்டு வாக்கில், இந்த நிலத்தின் அருகேயுள்ள வாழும்கலை ஆசிரமத்தின் நிறுவனர் ரவிசங்கர் குருஜி, கோபால கிருஷ்ணாவை அணுகி, புதிதாக நாங்கள் கட்டியுள்ள தியான மையத்துக்கு செல்ல சாலை வசதியில்லை. எனவே உங்களது நிலத்தை தந்தால் அதில் சாலை அமைத்துக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கிருஷ்ணா தனது நிலத்தில் 4 ஏக்கரை குத்தகைக்கு ஆசிரமத்திற்கு அளித்தாராம்.
இந்நிலையில், மொத்தம் 11 ஏக்கர் நிலத்தை சுற்றி வளைத்து மதிலும் கேட்டும் போட்டுவிட்டதாக ஆசிரமம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பெங்களூரில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்த்தி, "நாங்கள் அளித்த நிலத்தையும் சேர்த்து மொத்தம் 11 ஏக்கரை ஆசிரமம் வளைத்துள்ளது. வருவாய் துறை அதிகாரிகளை சர்வே செய்ய வர விடாமல் ஆசிரமத்தின் அரசியல் நெருக்கடி இருந்தது. எனவே ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சர்வே பணிகள் நடத்தப்பட்டன. அதில் ஆசிரமத்தின் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications