தொடங்கியது இந்தியாவின் செவ்வாய் பயணம்... விண்ணில் செலுத்தப்பட்டது 'மங்கள்யான்'!
ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் இன்று ஏவப்பட்டது. இந்த விண்கல முயற்சி வெற்றியா? இல்லையா என்பது 10 மாதங்களுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பியது. மொத்தம் ரூ.450 கோடி செலவிலான இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும்.
ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து இந்த ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கில் செல்லும் வகையில் நிலைநிறுத்தப்பட்ட நேரத்தில் சுமார் 10 நிமிஷங்களுக்கு விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரேடார்கள் மூலம் பார்க்க முடியவில்லை. அது தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

பூமியின் சுற்றுப்பாதையில் ..
2 மணி 38 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள், 40 நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது.

டிசம்பர் 1ல்
பூமியின் சுற்றுப்பாதையில் 20 முதல் 25 நாட்களுக்கு சுற்றியபின் செவ்வாய் கோளுக்கு டிசம்பர் 1-ந் தேதி பயணத்தை தொடங்கும்

300 நாட்கள்
தொடர்ந்து 280 முதல் 300 நாள்கள் பயணித்து செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி இணையும் எனவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது 10 மாதங்களுக்குப் பின்னர்தான் செவ்வாய் கிரக பயணம் வெற்றியா இல்லையா என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

3 இடங்களில் கண்காணிப்பு
இதற்காக போர்ட் பிளேர், பெங்களூரூ அருகே உள்ள பைலாலு, புருனே ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களிலும் முன்னேற்பாட்டுப் பணிகளில் விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுப்பட்டுள்ளனர்.

ரூ.450 கோடி
450 கோடி ரூபாய் செலவில் விண்ணில் ஏவப்படும் மங்கள்யான் வெற்றிப்பெற்றால், செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications