அத்வானிக்கு மீண்டும் காந்தி நகர்... மோடி நிர்பந்தம்: ஏற்க மறுக்கும் அத்வானி!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு காந்தி நகர் சீட்டைக் கொடுத்துள்ளது பாஜக. ஆனால் அதை அவர் ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மோடியின் கோட்டைக்குள் போய் மீண்டும் நிற்க அவர் விரும்பவில்லையாம்.
நேற்று பாஜக தனது 5வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் 67 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதி வேட்பாளராக அத்வானியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராவில் ஹேமமாலினி
மதுரா தொகுதி வேட்பாளராக நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார்.

ஜஸ்வந்த் சிங்குக்கு தஹோத்
ஜஸ்வந்த் சிங்குக்கு தஹோத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜ்யவர்த்தன் சிங் ரதோருக்கு ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் புறநகர் தொகுதி வேட்பாளராக ராஜ்யவர்த்தன் சிங் ரதோர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்வானி கடும் அதிருப்தி
அத்வானி, தான் மீண்டும் காந்தி நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் கடும் அதிருப்தி அடைந்துள்ளாராம். தனக்குத் தொகுதி வேண்டாம் என்று கூறியும் மீண்டும் அதே தொகுதியை தனக்கு கட்சி கொடுத்தது அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாம்.

குஜராத்தை விரும்பவில்லை
நரேந்திர மோடியை அறவே பிடிக்காத அத்வானி, அவரது மாநிலத்திற்குட்பட்ட காந்தி நகரில் மீண்டும் போட்டியிடுவதை விரும்பவில்லை. இதனால்தான் பல காலமாக காந்தி நகர் எம்.பியாக இருந்து வரும் அவர் இந்த முறை அங்கு போட்டியிட விரும்பவில்லை.

போபால் தேவை
மாறாக, மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலுக்கு மாற அவர் விரும்பினார். ஆனால் கட்சி அவருக்கு சீட் தரவில்லை.

சமாதானப்படுத்த விரைந்த சுஷ்மா
அத்வானி தனக்கு காந்தி நகர் தேவையில்லை என்று கூறியதைத் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்த சுஷ்மா சுவராஜையும், நிதின் கத்காரியையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் நேற்று இரவு அத்வானி வீட்டுக்குச் சென்று அவரை அமைதிப்படுத்த முயற்சித்தனராம். ஆனால் முடியவில்லையாம்.

ஏத்துக்கவே முடியாது
தனது விருப்பத்திற்கு மாறாக கட்சி சீட் கொடுத்ததை அத்வானி சுத்தமாக விரும்பவில்லையாம். இதை சுஷ்மா, கத்காரியிடம் அவர் கூறி விட்டாராம். இதையடுத்து ராஜ்நாத் சிங் வீட்டுக்குப் போன இருவரும் அத்வானியின் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

மோடிதான் வலியுறுத்தினாராமே
அத்வானியை காந்தி நகரிலேயே நிறுத்துமாறு மோடிதான் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் காந்தி நகரில் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் அத்வானியை தான் ஜெயிக்க வைப்பதாகவும் அவர் கூறினாராம். மேலும் கட்சியும் கூட ஒருமனதாக அத்வானியின் பெயரை காந்தி நகருக்குத் தேர்வு செய்ததாம்.

இருந்தாலும் பயந்து வருதே...
அப்படியும் அத்வானி பயப்படுவதற்குக் காரணம், எங்கே மோடி லாபி தனக்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டு தோற்கடித்து விடுமோ என்ற அச்சம்தானாம்.
இதற்கிடையே இன்று அத்வானியை சந்தித்து சமாதானப்படுத்த அருண் ஜேட்லியும் அவரது வீட்டுக்குப் போய் வந்தார்.












Click it and Unblock the Notifications