பஞ்சாப் தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் ஜூன் 1 சீக்கியர் வரலாற்றில் மறக்க முடியாத நாள் ஏன் தெரியுமா?
அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஜூன் 1-ந் தேதி சீக்கியர் வரலாற்றில் மறக்க முடியாத துயர நாள். காங்கிரஸுக்கு எதிரான பெருங்கொந்தளிப்பை நினைவூட்டக் கூடிய
ஜூன் 1-ந் தேதி ஒரே கட்டமாக பஞ்சாப்பில் வாக்குப் பதிவு நடைபெறுவது யதேச்சையானதா? என்கிற கேள்வியையும் எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
லோக்சபா தேர்தலின் 7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு நாளை மறுதினம் நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் மொத்தம் உள்ள 13 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஜூன் 1-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.

பஞ்சாப் கள நிலவரம்: பஞ்சாப்பில் அகாலிதளம்- பாஜக கூட்டணி vs காங்கிரஸ் என்கிற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது இந்த 3 கட்சிகளையும் காலி செய்துவிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கிறது. தற்போதைய தேர்தலில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இந்தியா கூட்டணியில் இருந்தாலும் பஞ்சாப்பில் இரு கட்சிகளும் 13 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகின்றன. இதேபோல பாஜகவுடனான கூட்டணியில் மீண்டும் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்ட அகாலி தளமும் 13 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. பாஜகவும் இதனால் 13 தொகுதிகளிலும் தனியாக களம் காண்கிறது. பஞ்சாப் லோக்சபா தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள்தான் அதிக இடங்களைப் பெறும் என்பது பொதுவான கணிப்பு.
மறக்க முடியாத ஜூன் 1-ல் வாக்குப் பதிவு: இது ஒருபுறம் இருக்க, வாக்குப் பதிவு நடைபெறும் நாளான ஜூன் 1-ந் தேதி குறித்து பல்வேறு கேள்விகளும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. ஏனெனில் ஜூன் 1-ந் தேதி என்பது சீக்கியர்கள் வரலாற்றில் மறக்க முடியாத இரு துயர நாட்கள். ஒன்று காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றது; மற்றொன்று பாஜக ஆட்சியில் அமர்ந்த அடுத்த ஆண்டிலேயே நடந்தது. இந்த துயர நிகழ்வுகள் வாக்காளர்கள் மத்தியில் ஒருவிதமான செல்வாக்கை செலுத்தாமல் இருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
1984-ம் ஆண்டு ஜூன் 1 ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்: பஞ்சாப் தனிநாடு கோரி பிந்தரன்வாலே தலைமையில் காலிஸ்தான் விடுதலைப் படை ஆயுதப் போர் நடத்திய காலம் 1984. பிந்தரன்வாலே தலைமையிலான பஞ்சாப் தனிநாட்டு புரட்சிப் படையை அழிக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் தொடங்கிய ஆபரேஷன் பெயர் ப்ளூ ஸ்டார். சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து, பஞ்சாப் தனிநாடு கோரி போராடிய பிந்தரன்வாலே உள்ளிட்ட பல நூறு போராளிகளை அழித்தது. பிந்தரன்வாலே உள்ளிட்டோர் சிந்திய ரத்தம் பஞ்சாப் பொற்கோவிலில் பேராறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால்தான் இந்திரா காந்தி அம்மையார், சீக்கியர் பாதுகாவலாளர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்திராவின் படுகொலைக்கு பழிவாங்க ராஜீவ் காலத்தில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கும் காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு முந்தைய வரலாறு இது. ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரையும் இந்திரா படுகொலைக்கு பழிவாங்கிய ராஜீவ் நடத்திய நரமாமிச வேட்டையையும் நினைவில் கொள்ளும் ஒவ்வொரு சீக்கியரும் காங்கிரஸுக்கு எதிராகவே வாக்களிப்பர் என்பது யதார்த்தம்.
2015 -ம் ஆண்டு ஜூன் 1 சீக்கியர் புனித நூல் இழிவுபடுத்தல்: மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு ஜூன் 1-ல்தான் சீக்கியர்களின் புனித நூலான குருகிரந்த சாஹிப் கோட்கபுராவின் பர்காரி குருத்வாராவில் கிழிக்கப்பட்டு அதன் பக்கங்கள் சாலைகளில் வீசப்பட்டிருந்தன. இது ஏதோ ஒரு இடத்தில் மட்டும் நிகழ்ந்த சம்பவம் அல்ல இது. பஞ்சாப்பின் பல பகுதிகளிலும் இத்தகைய அவமதிப்புகள் தொடர்ச்சியாக பல மாதங்களாக திட்டமிட்டே நிகழ்த்தபட்டன. இதற்கு எதிரான கிளர்ச்சிகளில் சீக்கியர் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யபட்டனர். இது இன்னமும் கிளர்ச்சியை தீவிரப்படுத்தியது. இதுவும் இன்றைய காலிஸ்தான் தீவிரவாத முழக்கத்தின் 9 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறுதான். இந்த சம்பவம் அண்மைய காலத்தில் நிகழ்ந்தது. அதுவும் மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்த காலத்தில் நிகழ்ந்தது. ஏற்கனவே பாஜக அரசு மீது சீக்கியர் விவசாயிகள் பெருங்கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். 2015 வன்முறை நிகழ்வுகளும் பாஜகவுக்கு எதிரான பேரலையைத்தான் உருவாக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications