சந்திரபாபு நாயுடுவுடன் பாஜக மீண்டும் கூட்டணி! ஆந்திராவில் எத்தனை தொகுதியில் போட்டி தெரியுமா?
அமராவதி: வரும் லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளது. மேலும் 3 கட்சிகளும் சுமூகமாக தொகுதி பங்கீட்டை முடித்துள்ளனர். இது காங்கிரஸ் மற்றும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 15 ம் தேதிக்குள் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம். ஆந்திராவை பொறுத்தமட்டில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடைபெற வாய்ப்புள்ளது.

தற்போது அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தனித்தே போட்டியிட உள்ளது.
மாறாக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது. ஆந்திராவை பொறுத்தமட்டில் ஜெகன் மோகன் ரெட்டி மிகவும் பலமாக இருக்கிறார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் அவரது கட்சி 23 இடங்களை கைப்பற்றியது. 2 இடங்களில் மட்டுமே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வென்றது. இதனால் பாஜக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது.
2018 ம் ஆண்டு வரை பாஜக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இருந்தது. அதன்பிறகு பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கினர். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைப்பதில் உடன்பாடு ஏற்பட்டது. மேலும் தொகுதி பங்கீடும் சுமூகமாக முடிவடைந்துள்ளது. அதாவது மொத்தம் 25 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பாஜகவுக்கு 6 தொகுதிகளும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு 2 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் முக்கிய தொகுதிகளை கைப்பற்ற பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜம்பேட்டை, ராஜமுந்திரி, திருப்பதி, அரகூ உள்ளிட்ட தொகுதிகளை பெற பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டணி மூலம் காங்கிரஸ் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் இரு கட்சிகளும் தனித்து களம் காண்கின்றனர். தற்போது ஆளும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சில இடங்களில் அதிருப்தி அலை உள்ளது. மாறாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் பாஜக + தெலுங்கு தேசம் + பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகளின் கூட்டணி நிச்சயம் காங்கிரஸ் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்பின்போது சந்திரபாபு நாயுடுவிடம் ஆந்திரா சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றியும் பாஜக தலைவர்கள் பேசி உள்ளனர். ஆந்திரா சட்டசபை தேர்தல் தேதியும், நாடாளுமன்ற தேர்தலோடு அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டன. மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 151 தொகுதியிலும், பவன் கல்யாண் கட்சி 24 தொகுதியிலும் போட்டியிடுவதாக ஏற்கனவே கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளன. சட்டசபை தேர்தல் கூட்டணியில் பாஜகவை அவர்கள் சேர்க்கவில்லை.
இத்தகைய சூழலில் தான் சட்டசபை தேர்தலிலும் 3 பேரும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி பாஜக தலைவர்கள் பேசியுள்ளனர். அதற்கு சந்திரபாபு நாயுடு, ‛‛சட்டசபை தேர்தலில் நான் 145 தொகுதிகளில் நான் கட்டாயம் போட்டியிட உள்ளேன். மீதமுள்ள 30 தொகுதிகளை வேண்டுமானால் பவன் கல்யாண் கட்சியும், நீங்களும் பிரித்து கொள்ளுங்கள்'' என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு பாஜகவும், ஜனசேனாவும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் இன்னும் அதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications