'ஜெகன் கோட்டை' ஆந்திரா: ஆழப் புதைத்துக் கொண்ட காங்கிரஸை ஷர்மிளாவால் உயிர்ப்பித்துவிடவா முடியும்?
அமராவதி: ஆந்திராவில் 2011-ம் ஆண்டு முதலே தமக்கு தாமே புதைகுழியைத் தோண்டி ஆழப் போய் படுத்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியை ஒய்.எஸ்.ஷர்மிளா எனும் புதிய அவதாரத்தால் மட்டும் மீட்டு விடமுடியுமா? என்பதுதான் ஆந்திரா தேர்தல் களம் எழுப்புகிற கேள்வி.
ஒருங்கிணைந்த ஆந்திரா.. தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்படுவதற்கு முந்தைய ஆந்திரா.. காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத ஆகப் பெரும் கோட்டை. அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை தந்த மிக துயரமான தருணங்கள் இந்திரா காலத்து எமர்ஜென்சி, ராஜீவ் காலத்து போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்.. அப்போதே காங்கிரஸுக்கு ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் இருந்தது ஆந்திராதான். இன்றைய தெலுங்கானாவின் மேடக் தொகுதி எம்பியாகவே மரணித்தவர் இந்திரா அம்மையார். என்டி ராமராவ் எனும் ' ஆந்திரா புரட்சித் தலைவர்' புயலையும் எதிர்கொண்டு நீச்சலடித்ததுதான் காங்கிரஸ்.

ராஜசேக ரெட்டி: இப்படி ஆந்திரா அசைக்க முடியாத கோட்டையாக இருந்த காலம் மலையேறிப் போக காங்கிரஸ் கோட்டை விட்டது எப்போது? 2004-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி எனும் இரும்பு மனிதர் தலைமையில் காங்கிரஸ் 185 (மொத்தம் 294- பெரும்பான்மைக்கு தேவை 148) இடங்களைக் கைப்பற்றியது. 2009-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் 156 இடங்களில் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்தது. ஆந்திரா முதல்வராக மீண்டும் பதவியேற்றார் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. ஆனால் சில மாதங்களிலேயே ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார் ராஜசேகர ரெட்டி. இது ஆந்திராவை மட்டும் அல்ல ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையுமே அதிர்ச்சியில் உறைய வைத்தது. நேரு குடும்பமானது தங்களுக்கு மிக நெருக்கமான தென்னிந்திய தலைவர்களில் ஒருவரான ஒய்.எஸ்.ஆரை இழந்தது.
காங்கிரஸின் பச்சை துரோகம்: ஒய்.எஸ்.ராஜசேக ரெட்டி மறைவின் போது அரசியலுக்கு அறிமுகமானவர் இன்றைய முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டி. இயல்பாகவே ஒய்.எஸ்.ஆர். மறைவுக்கு பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் காங்கிரஸ் மேலிடமோ அப்படியே ஒய்.எஸ்.ஆர். குடும்பத்தை கை கழுவியது. ஜெகன் மோகன் ரெட்டியை கண்டு கொள்ளவே இல்லை. ரோசைய்யா, கிரண் ரெட்டி என அடுத்தடுத்த முதல்வர்களை களமிறக்கியது. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சி தம்மை ஓரம்கட்டி ஒழித்துக் கட்டுவதை உணர்ந்து கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி, தந்தையின் பாணியில் யாத்திரை போனார்; மக்கள் சக்தியை தக்க வைத்துக் கொண்டார். இந்த துணிச்சலில்தான் காங்கிரஸில் இருந்து வெளியேறி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். ஆந்திராவில் காங்கிரஸ் பேரியக்கமே துடைத்தெறியப்பட்டு ஒட்டுமொத்த காங்கிரஸும் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸாக உருமாறியது.
ஜெகனை தூக்கி உள்ளே வைத்த காங்கிரஸ்: ஜெகன் மோகன் ரெட்டி கட்சியை தொடங்கிய ஓராண்டிலேயே காங்கிரஸ் கட்சியால் பெரும் குடைச்சல்களை எதிர்கொண்டார். 2012-ல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டியை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது. இங்கிருந்துதான் காங்கிரஸ் தமது புதைகுழியை தமக்கு தாமே தோண்டவும் தொடங்கியது.
காங்கிரஸுக்கு முடிவுரை எழுதிய ஜெகன்: 2011-ல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய ஜெகன் மோகன் ரெட்டி தாம் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில் 2014-ல் 70 இடங்களைக் கைப்பற்றி அசத்தல் ஆட்டம் ஆடினார். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 21 இடங்கள்தான் கிடைத்தன. அதாவது முந்தைய 2009 தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். பெற்றுக் கொடுத்தது 156 இடங்கள். ஆனால் 2014-ல் காங்கிரஸுக்கு கிடைத்தது வெறும் 21. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அந்த தேர்தலில் 27.88% வாக்குகள் கிடைத்தன; காங்கிரஸ் கட்சிக்கு 11.71% வாக்குகள்தான் கிடைத்தன. 2009-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் 24.84% வாக்குகளை பறிகொடுத்தது காங்கிரஸ்; இந்த வாக்குகள் அனைத்தும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கே போயின என்பது வெளிப்படையானதுதான். அன்று புதை குழியில் படுத்த காங்கிரஸ் அடுத்த நடவடிக்கைகளால் லாரி லாரியாக தாம் படுத்துக் கிடந்த புதைகுழியில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தது.
இத்தனை கோப வெறியில் ஆந்திரா வாக்காளர்கள்: ஆம்.. ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தை இரண்டாக உடைத்து தனி தெலுங்கானாவை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சிதான் உருவாக்கியது. ஆந்திராவை உடைத்த பெருங்கோபம் இன்னமும் தணியாமல்தான் இருக்கிறது. அதிலும் ஹைதராபாத்தை பறிகொடுத்த வேதனையும் வெறுப்பும் அடங்காதவர்களாக இருக்கின்றனர் ஆந்திரா வாக்காளர்கள். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பொருளாதார உதவி என்ற வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிட்டதில் அதீதமான கோபத்தில்தான் காங்கிரஸ் மீது ஆந்திரா மக்கள் இருந்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகால பாஜக மீதும் சமமான கோபத்தை கொட்டுகின்றனர் ஆந்திரா மக்கள். ஆனால் காங்கிரஸை ஒப்பிடுகையில் ஆந்திராவில் பாஜகவின் பலம் மிக மிக சொற்பம்தான். அதனால் பேரிழப்பு என்பது காங்கிரஸுக்குதான்.
ஜெகனின் அசைக்க முடியாத கோட்டை: 2019-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ருத்ரதாண்டவமாடினார். அன்று தந்தை பெற்ற வெற்றியைப் போலவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 151 இடங்களைப் பெற்றுத் தந்தார். அத்தேர்தலில் ஜெகன் கட்சியின் வாக்கு சதவீதம் 49.95%. ஆந்திராவில் அசைக்க முடியாத வலிமை பெற்ற இளம் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி வலுவாக வேர்பிடித்து நின்றதையே அத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. 174 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. காங்கிரஸின் வாக்கு சதவீதம் வெறும் 1.17% மட்டுமே. 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் புதைகுழியோடு புதைகுழியாக புதையுண்டு போனதுதான். இனி ஆந்திராவில் காங்கிரஸ் மீளவே வாய்ப்பில்லை என்ற நிலைதான்.
ஒய்.எஸ்.ஷர்மிளாவால் உயிர்ப்பிக்க முடியுமா?: இருந்த போதும் தற்போது ஒய்.எஸ். ராஜசேக ரெட்டி குடும்பத்தின் இன்னொரு அரசியல் வாரிசான ஒய்.எஸ்.ஷர்மிளாவை ஆந்திர காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்கி தமக்கு தாமே அள்ளிப் போட்டுக் கொண்ட மணல் குவாரியை அகற்ற முயற்சிக்கிறது காங்கிரஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக எத்தனை சதிவலைகள் சூழ்ந்தாலும் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு அவற்றை தவிடுபொடியாக்கிக் கொண்டே இருக்கிறது. ஜெகன் மோகனின் கோட்டையாகிவிட்ட ஆந்திராவில் ஓட்டை போட அவரது ரத்தமாம் தங்கையாம் ஒய்.எஸ்.ஷர்மிளாவை களமிறக்கிவிட்டிருக்கிறது காங்கிரஸ். "தற்கொலை" செய்து கொண்ட காங்கிரஸுக்கு ஒய்.எஸ்.ஷர்மிளாவால் உயிர் கொடுக்க முடியுமா? இல்லையா? என்பது ஜூன் 4-ல் தெரிந்து விடும்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications