எல்லையில் ரஜோரி , பூஞ்சில் திடீரென கேட்ட வெடிச்சத்தம்? உடனே ஸ்பாட்டிற்கு போன ராணுவம்! பதற்றம்
ஜம்மு: வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் திடீரென அத்துமீறித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் பரபரப்பு அதிகரித்துள்ளது. எல்லையில் உள்ள அனைத்து வீரர்களும் ஹை அலர்ட் மோடில் உள்ளனர். இதற்கிடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே ரஜோரி மற்றும் பூஞ்சில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா புதன்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. இந்தியா தாக்குதல் நடத்திய 9 இடங்களுமே தீவிரவாத முகாம்கள். இந்தத் தீவிரவாத முகாம்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம் மிக துல்லியமாக இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தது. பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைக்காமல் தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்துத் தாக்குதல் நடத்தியிருந்தது. மேலும், இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை. இந்தியாவின் இந்தத் தாக்குதலால் கோபம் கொண்ட பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்று வருகிறது. ஏற்கனவே புதன் இரவு 15 இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில் அது தோல்வியில் முடிந்தது.
அடி வாங்கும் பாகிஸ்தான்
இதற்கிடையே வியாழன் இரவு மீண்டும் எல்லையில் தாக்குதல் நடத்தியது. ஜம்மு தொடங்கிப் பல எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்தியப் பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது. பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு தகர்த்தது.
பாகிஸ்தானின் இந்த திடீர் தாக்குதலில் எல்லையில் பதற்றத்தை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. தாங்கள் எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என பாகிஸ்தான் சொன்னாலும் எல்லையில் இருந்து வரும் வீடியோக்கள் தாக்குதல் நடந்துள்ளதையே காட்டுகிறது. இந்திய ராணுவமும் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவே கூறுகிறது.
திடீர் வெடிச்சத்தம்
இந்தச் சூழலில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது எல்லையில் முக்கிய இடங்களாகக் கருதப்படும் ரஜோரி (Rajouri) , பூஞ் (Poonch) பகுதிகளில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியப் பாதுகாப்புப் படைகள் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. இன்று வெள்ளிக்கிழமை காலை பிரஸ் மீட்டிலேயே என்ன நடந்தது என்பதை இந்தியா விளக்கவுள்ளது. இருப்பினும், அங்கு ஏதோ சத்தம் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலால் இந்தச் சத்தம் கேட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஹை அலர்ட் மோட்
பாகிஸ்தான் திடீரென நடத்திய இந்தத் தாக்குதல் காரணமாக எல்லையில் பாதுகாப்புப் படையினர் ஹை அலர்ட் மோடில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பாதுகாப்புப் படையினரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பகுதிகளில் எந்தவொரு சம்பவமும் ஏற்படாமல் இருக்கவும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான அளவுக்குப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா எந்தவொரு இடத்திலும் முதலில் தாக்குதலை நடத்தவில்லை. அதேநேரம் பாகிஸ்தான் தரப்பு தாக்குதலுக்கு இந்தியா சரியான பதிலடி மட்டுமே கொடுத்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் செய்தியாளர் சந்திப்பை மத்திய அரசு நடத்துகிறது. அதில் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications