2 நாட்களுக்கு பிறகு பெங்களூரில் திறக்கப்பட்ட பெட்ரோல் பங்குகள்.. கூட்டமோ, கூட்டம் #bengaluru
பெங்களூர்: இரு நாட்களுக்கு பிறகு பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டதால் பெங்களூர் பங்குகளில் பெரும் கூட்டம் நிலவியது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் கன்னடர் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களால் பெங்களூரில் நேற்று முன்தினம் கன்னட அமைப்பினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் வாகனங்கள் தீக்கிரையாகின. அடையார் ஆனந்தபவன், பூர்வீகா போன்ற தமிழக நிறுவனங்கள் பெங்களூரில் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து மாலையில் 144 தடையுத்தரவு பெங்களூரில் அமல்படுத்தப்பட்டது. கலவரம் தொடர்ந்ததால், 16 காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் இரவு, போலீஸ் வாகனத்தை கொளுத்த முயன்ற உமேஷ் என்ற 25 வயது இளைஞர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூடுக்கு பிறகு கலவரக்காரர்கள் வயிற்றில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் போலீசார் சுட்டு கொன்றுவிடுவார்களோ என்ற அச்சத்தால் நேற்று காலை முதல் நகரில் புதிதாக கலவரம் ஏதும் நடைபெறவில்லை.
அதேநேரம், கலவரம் நடைபெறும் என்ற பீதி காரணமாக, பெங்களூரில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. தியேட்டர்களில் படம் திரையிடப்படவில்லை. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மாலையில்தான் நகரம் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.
இன்று காலை முதல் அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளன. இதனால் பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்தனர். 2 நாட்களாக எரிபொருள் நிரப்ப முடியவில்லை என்பதால் இன்று நீண்ட கியூவில் நின்று எரிபொருள் நிரப்பினர். ஒவ்வொரு வாகன ஓட்டியும், அரை மணி நேரமாவது கியூவில் நின்று பெட்ரோல் போட வேண்டியதாயிற்று. இதனால் பலரும் அலுவலகங்களுக்கு தாமதமாக போய் சேர்ந்தனர்.












Click it and Unblock the Notifications