மபி: 4 முறை கொரோனா- எனக்கு சீட் தராதீங்க-கெஞ்சும் பாஜக அமைச்சர் 'ராஜமாதா' யசோதர ராஜே யார் தெரியுமா?
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் தமக்கு மீண்டும் போட்டியிட சீட் கொடுக்க வேண்டாம் என டெல்லி தலைமைக்கு மாநில அமைச்சர் யசோதரா ராஜே சிந்தியா கடிதம் அனுப்பி இருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி உள்ளது. 2018 தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்தது. ஆனால் காங்கிரஸில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவை கலகக் குரல் எழுப்ப வைத்து முதல்வர் கமல்நாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தது பாஜக. இதனால் பாஜக ஆட்சி, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் அமைந்தது. இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார் ஜோதிராதித்ய சிந்தியா.

முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்: விரைவில் நடைபெற உள்ள மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பிரசாரங்களில் பாஜக படு தீவிரமாக இறங்கி உள்ளது. மேலும் முதல் கட்டமாக 79 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது. இந்த வேட்பாளர்கள் பட்டியலில் 3 மத்திய அமைச்சர்கள், 4 எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஓரம் கட்டப்படும் சிவராஜ்சிங் சவுகான்: அதேநேரத்தில் தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெயர் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. பாஜகவின் வழக்கமான கொள்கைப்படி சிவராஜ் சிங் சவுகான் வயதை காரணம் காட்டி அவரை ஓரம் கட்ட பாஜக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடகாவில் மூத்த பாஜக தலைவரான முன்னாள் முதல்வர் எடியூரப்பா இப்படித்தான் அண்மையில் ஓரம் கட்டப்பட்டார்.
முதல்வர் வேட்பாளர் யார்?: சிவராஜ்சிங் சவுகான் மட்டுமல்லாமல் அவரது அமைச்சரவை சகாக்கள் பலருக்கும் இம்முறை சீட் மறுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் யார் முதல்வர்? என்கிற விவாதமும் எழுந்துள்ளது. இந்த ரேஸில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த தற்போதைய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, கைலாஷ் விஜய் வர்ஜியா உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன.

சீட் தந்துடாதீங்க எஜமான்: இந்த களேபரங்களுக்கு மத்தியில்தான் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் யசோதர ராஜே சிந்தியா தாம் தேர்தலில் இம்முறை போட்டியிடவில்லை என டெல்லி பாஜக தலைமைக்கு லீவ் லெட்டர் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை யசோதர ராஜே சிந்தியாவும் உறுதிப்படுத்தி உள்ளார். தமக்கு 4 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னமும் தாம் முழுமையாக குணமடையாத சூழ்நிலையில் சுற்றுப் பயணங்களை மேற்கொள்வது சிரமமாக இருக்கும்; ஆகையால் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளாராம் யசோதர ராஜே சிந்தியா.
யார் இந்த யசோதர ராஜே சிந்தியா?: ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான குவாலியர் அரச பரம்பரையைச் சேர்ந்த வசுந்தர ராஜே சிந்தியாவின் சகோதரிதான் யசோதர ராஜே சிந்தியா. அதாவது தற்போதைய மத்திய அமைச்சரும் ம.பி. பாஜகவின் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவருமான ஜோதிராதித்ய சிந்தியாவின் சொந்த அத்தைதான் யசோதர ராஜே சிந்தியா.

யசோதர ராஜே சிந்தியாவும் தேர்தலும்: யசோதர ராஜே சிந்தியா தேர்தலில் போட்டியிட மறுப்பதற்கு தோல்வி பயம்தான் என ஒரு காரணம் கூறப்படுகிறது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் இதனை முற்று முழுதாகவே நிராகரிக்கின்றனர். ஏனெனில் 1998-ம் ஆன்டு முதல் 2007-ம் ஆண்டு வரை சிவ்புரி சட்டசபை தொகுதியில் தொடர்ந்து வென்ற "ராஜமாதா" யசோதர ராஜே சிந்தியா. குவாலியர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யும் ஆனார். 2013-ல் மீண்டும் சிவ்புரி தொகுதியில் போட்டியிட்டு 11,145 வாக்குகள் வித்தியாசத்திலும் 2018-ல் 28,227 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றவர் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இருந்த போதும் இங்கேதான் ஒரு ட்விஸ்ட் காத்திருக்கிறது.
அச்சமூட்டும் காங்கிரஸ் வேட்பாளர்?: 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யசோதர ராஜே சிந்தியாவால் தோற்கடிக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியின் பீரேந்திர ரகுவன்ஸி. அத்தேர்தலில் தாம் தோல்வி அடைய அன்றைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாதான் காரணம்; அத்தை யசோதர ராஜே சிந்தியா வெற்றிக்காக தன்னை பலிகடாவாக்கிவிட்டார் ஜோதிராதித்ய சிந்தியா என குற்றம்சாட்டிவிட்டு காங்கிரஸுக்கு முழுக்குப் போட்டார் ரகுவன்ஸி. பின்னர் பாஜகவில் இணைந்து கோலாரஸ் தொகுதியில் வெற்றியும் பெற்றார் அவர். ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் இணைந்த போது ரகுவன்ஸி மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பிவிட்டார். தற்போது சிவ்புரி தொகுதியிலேயே ரகுவன்ஸி மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கப் போவது உறுதி எனக் கூறப்படுகிறது. இந்த பின்னணியில்தான் யசோதர ராஜே சிந்தியா, தேர்தல் களமே எனக்கு வேண்டாம்.. சீட் கொடுக்காதீங்க என பாஜக மேலிடத்துக்கு கொரோனா லீவ் லெட்டர் கடிதத்தை அனுப்பி இருக்கிறார் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications