முகத்தில் சிறுநீர் கழிப்பு! கைதானவரின் வீட்டை இடித்ததற்கு எதிராக கோர்ட்டை நாடும் பிராமணர் சங்கம்
போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தை சேர்ந்தவரின் முகத்தில் சிறுநீர் கழித்து அவமரியாதை செய்தவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. இந்நிலையில் தான் வீடு இடிக்கப்பட்ட விஷயத்தில் பிராமணர் சங்கம் நீதிமன்றம் செல்வதாக பரபரப்பாக அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான் சித்தி மாவட்டம் குப்ரி கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த தாஷ்மத் ராவத் என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் தாஷ்மத் ராவத்தின் முகத்தில் பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு தரப்பினர் பிரவேஷ் சுக்லாவின் செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் பிரவேஷ் சுக்லா பாஜக நிர்வாகி என்பதும், அவர் போதையில் வேண்டும் என்றே தாஷ்மத் ராவத்தின் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் தகவல்கள் பரவின. இதனை பாஜக மறுத்துள்ளது. இதையடுத்து பிரவேஷ் சுக்லா மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டார். விசாரணை நடத்திய போலீசார் பிரவேஷ் சுக்லாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிமித்து கட்டியிருந்ததாக கூறி பிரவேஷ் சுக்லா வசித்து வந்த வீடும் புல்டோசரால் இடிக்கப்பட்டது. மாநில அரசின் உத்தரவை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் வீட்டை இடித்தது. இதற்கு அங்குள்ள பிராமணர் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது அகில பாரதியா பிராமின் சமாஜ் என்ற அமைப்பு தான் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில தலைவர் பண்டிட் புஷ்பேந்திர மிஸ்ரா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது: பிரவேஷ் சுக்லாவின் வீடு இடிக்கப்பட்டதற்கு எதிராக மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தை நாட உள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்துக்கு முழு உதவி செய்வேன் என உறுதியளிக்கிறேன்.

பிரவேஷ் சுக்லாவின் செயலை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இருப்பினும் அவர் செய்த செயலுக்காக மற்றவர்களை தண்டிப்பது சட்டப்படி சரியா?. ஏனென்றால் இடிக்கப்பட்ட வீடு என்பது பிரவேஷ் சுக்லாவின் தந்தை ராமகாந்த் சுக்லாவுக்கு சொந்தமானது. தற்போது வீடு இடிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என கூறியுள்ளார்.
மேலும் வீட்டை இழந்து தவிக்கும் பர்வேஷ் சுக்லாவின் குடும்பத்துக்கு உதவி செய்யும்படி அவர் ஒவ்வொரு மாவட்ட பிராமணர் சங்க தலைவர்களுக்கும் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார். அதன்படி சித்தி மாவட்ட தலைவர் ராகேஷ் துபே தலைமையிலான நிர்வாகிகள் பர்வேஷ் சுக்லாவின் குடும்பத்தினரை சந்தித்து ரூ.51 ஆயிரம் வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications