ம.பி.யில் ஒரே தலித் குடும்பத்தில் பெரும் சோகம்- 5 ஆண்டுகளாக துரத்தும் "கொலைகள்”-கட்சிகள் கொந்தளிப்பு
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 2019-ம் ஆண்டு முதல் ஒரே தலித் குடும்பம் தொடர்ந்து எதிர்கொள்ளும் மரணங்கள் அம்மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கின்றன.
2019-ம் ஆண்டு ம.பி. சாகர் மாவட்டத்தில் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த விக்ரம் சிங் என்பவர் மீது தலித் பெண் ஒருவர் பலாத்கார புகார் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் விக்ரம் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் இந்த விவகாரம் அத்துடன் முடியவில்லை. விக்ரம் சிங் தம் மீதான புகாரை திரும்பப் பெறக் கோரி தலித் பெண்ணின் குடும்பத்தினரை துன்புறுத்தி வந்தார். கடந்த ஆண்டு இந்தப் பிரச்சனை விஸ்வரூபமாக வெடித்தது.
ஏனெனில் விக்ரம் சிங்கும் அவரது அடியாட்களும் தலித் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து கொடூரமாக தாக்கினர். அவரது வீட்டையும் சூறையாடினர். இந்தத் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட தலித் பெண் சகோதரரையும் விக்ரம் சிங் கும்பல் கொடூரமாகத் தாக்கிப் புகாரை வாபஸ் பெற வலியுறுத்தியது. ஆனாலும் அந்த தலித் இளைஞர் மறுத்துவிட்டார். அப்போது தலித் இளைஞரின் தாயார் இதனைத் தடுக்க முயற்சித்தார். விக்ரம் சிங், தலித் இளைஞரின் தாயாரையும் நிர்வாணப்படுத்தி தாக்கியது. இந்த சம்பவத்தில் தலித் இளைஞரான நிதின் அகிர்வார் மரணமடைந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் ம.பி. மாநில பாஜக அரசு வேடிக்கைதான் பார்த்தது.
இதன் விளைவாகவே அடுத்தடுத்த 2 மரணங்கள் நிகழ்ந்துவிட்டன. இது மிகப் பெரும் துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் சிங் கோஷ்டி மீண்டும் தலித் பெண் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று மிரட்டி இருக்கிறது. அப்பெண்ணின் மற்றொரு உறவினரான ராஜேந்தர் அக்ரிவாரையும் கொடூரமாகத் தாக்கியது. இதில் ராஜேந்தர் அக்ரிவார் கொல்லப்பட்டுவிட்டார்.
ராஜேந்தர் அக்ரிவாரின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி எடுத்துச் செல்லும் போது பாதிக்கப்பட்ட தலித் பெண்ணும் அதில் ஏற முயன்றார். ஆனால் ஆம்புலன்ஸ் வேனில் இருந்து தவறி கீழே விழுந்த பாதிக்கப்பட்ட தலித் பெண் மரணமடைந்தார்.
தற்போது மத்திய பிரதேச லோக்சபா தேர்தல் களத்தில் இந்த மரணங்கள் பெரும் பிரளயத்தைக் கிளப்பி வருகின்றன. காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மாநில பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications