ம.பி. கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 111 பேர் பலி, 100 பேர் காயம்
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள ரதன்கர் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 111 பேர் பலியாகினர். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ளது ரதன்கர் மாதா கோவில். அங்கு நவராத்திரியின் கடைசி நாளான நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவிலை அடைய அவர்கள் சிந்து நதியின் மீதுள்ள பாலத்தில் செல்ல வேண்டும்.

அந்த பாலத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது பாலம் இடிந்து விழப் போவதாக வதந்தி பரவியது. இதையடுத்து பக்தர்கள் தங்கள் உயிரைக் காக்க முந்தியடித்து ஓடினர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 111 பேர் பலியாகினர். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர்.

நேற்று கோவிலுக்கு 2 முதல் 4 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். இது வழக்கமாக வரும் கூட்டத்தை விட அதிகம் ஆகும். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 25 முதல் 30 வாலிபர்கள் தாங்கள் கோவிலுக்கு விரைவில் செல்ல வேண்டும் என்பதற்காக பாலம் இடிந்து விழப்போவதாக வதந்தியை பரப்பியதாக டிஐஜி டி.கே. ஆர்யா தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சிவராஜ் சிங் சவுகானை தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications
