மகா கும்ப மேளாவில் கலந்து கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரெனுக்கு அலர்ஜி பாதிப்பு! ஏன் என்னாச்சு?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவிக்கு அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த கும்பமேளா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இது பிப்ரவரி 26ஆம் தேதி வரையிலான 45 நாட்களுக்கு நடைபெறும்.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி செய்யப்பட்டுள்ளது. 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்த மகா கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கும்பமேளாவில் கலந்து கொள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரென் பாவெல் (61) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
அவரது மனைவி லாரென் பாவெல், ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவராக இருக்கிறார். இதனால் இந்த கும்பமேளாவுக்கு வருகை தருகிறார். அவருக்கு கமலா என பெயர் வைக்கப்பட்டது. முன்னதாக வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் லாரென் தரிசனம் செய்தார்.
ஆன்மீக குரு கைலாஷ் ஆனந்த் கிரி என்பவரின் ஆசிரமத்தில் தங்கியுள்ள லாரென், மகா கும்பமேளா நடைபெறும் பகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசல் மிக்க இடங்களுக்கு இதுவரை அவர் சென்றதில்லை என்பதால் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டதாக தெரிகிறது.
இவர் நாளை வரை இந்தியாவில் தங்கியிருக்கிறாராம். பிறகு அமெரிக்காவிற்கு செல்கிறார். அங்கு 20ஆம் தேதி நடைபெறும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.












Click it and Unblock the Notifications