நடுக்கடலில் வெடித்துச் சிதறிய படகு- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாலத்தீவு அதிபர்
மாலே: ஹஜ் யாத்திரை சென்று விட்டு மாலத்தீவு திரும்பிய அந்நாட்டு அதிபர் சென்ற படகு நடுக்கடலில் வெடித்ததில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா அருகே அமைந்து உள்ள மாலத்தீவு நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் 56 வயது அப்துல்லா யாமீன் அப்துல் கயூம். இவர் அண்மையில் தனது மனைவி பாத்திமாவுடன் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு புனித ஹஜ் யாத்திரை சென்றார்.
அங்கு அவர்கள் ஹஜ் கடமைகளை முடித்துவிட்டு நேற்று சவுதி அரேபியாவில் இருந்து விமானம் மூலம் மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு திரும்பினர்.

மாலத்தீவின் சர்வதேச விமான நிலையம் மாலே அருகில் ஒரு தீவில் அமைந்து உள்ளது. நேற்றுகாலை இந்த விமானம் நிலையம் வந்து இறங்கிய அப்துல் கயூம், அவருடைய மனைவி பாத்திமா மற்றும் மெய்க்காப்பாளர்கள் சிலர் ராணுவத்துக்கு சொந்தமான ஒரு அதிவேக படகில் ஏறி மாலே நோக்கி புறப்பட்டனர்.
சிறிது தூரம் சென்ற நிலையில் அந்த படகின் எஞ்ஜின் பகுதி திடீரென வெடித்தது. அந்த சத்தம் காதை பிளக்கும் வகையில் இருந்தது. பலமாக புகையும் வந்தது. அப்போது அந்த படகின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக அதிபர் அப்துல் கயூம் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார். எனினும் மனைவி பாத்திமாவும், மெய்க்காப்பாளர் ஒருவரும் காயம் அடைந்தனர்.
உடனடியாக மூவரும் இன்னொரு படகு மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் மூவரும் மாலேயில் உள்ள இந்திராகாந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அதிபர் அப்துல் கயூமுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவருடைய மனைவி பாத்திமாவுக்கும், மெய்க்காப்பாளருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படகு வெடித்ததற்கான காரணம் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து, மாலத்தீவு அமைச்சர் முகமது ஹூசேன் ஷெரீப் கூறுகையில், ‘‘படகின் எஞ்ஜின் பகுதி வெடித்ததால் அதன் மேற்கூரை பெயர்ந்து அதிபரின் மனைவி மீது விழுந்தது. இதில் அதிபருக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால் அவருடைய மனைவி காயம் அடைந்தார். எனினும் அது கவலைப்படும்படியான காயம் இல்லை. படகில் வெடிப்பு தற்செயலாக நடந்ததா? அல்லது நாசவேலை காரணமா? என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications