"ரொம்ப தொந்தரவா இருந்துச்சு.." ஆளுநரின் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்த மம்தா! இது வங்கத்து அரசியல்
கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கரின் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே சுமுகமான ஒரு உறவு இல்லை. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடைய மோதல் போக்கே நிலவி வருகிறது.
அம்மாநில சட்டசபைத் தேர்தல் முடிந்த சமயத்தில், மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. மம்தா பானர்ஜி சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். அதற்குத் தேர்தல் காலத்தில் மாநில நிர்வாகம் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே இல்லை எனக் கூறி பதிலடி கொடுத்திருந்தார் மம்தா.

மோதல் போக்கு
தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மேற்கு வங்க அரசு அனுப்பும் கோப்புகளில் ஆளுநர் ஜெகதீப் தங்கர் கையெழுத்திடத் தாமதப்படுத்துவதாக அம்மாநில அமைச்சர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்குவது தொடர்பாகக் கூட ஆலோசித்து வருவதாகக் கூறி அம்மாநில அமைச்சர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.

பிரதமருக்கு கடிதம்
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தங்கரின் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "அவர் அலுவலர்கள் சொல்வதை மதிப்பதில்லை. அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். இது தொடர்பாக நானே கூட அவரை நேரில் சந்தித்துப் பேசினேன். கடந்த ஒரு வருடமாக நாங்கள் பொறுமையாகத் தவித்து வருகிறோம். அவர் பல முக்கிய கோப்புகளுக்குக் கையெழுத்திடவில்லை. பல கோப்பைகளை நிலுவையில் போட்டுள்ளார். மாநிலத்தின் கொள்கை முடிவுகள் குறித்து அவரால் எப்படிப் பேச முடியும். இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு குறைந்தது நான்கு கடிதங்களாவது எழுதியுள்ளேன்.

பிளாக் செய்துவிட்டேன்
அவர் (ஜெகதீப் தங்கர்) ஒவ்வொரு நாளும் என்னை அல்லது எனது அதிகாரிகளை அவதூறாக ட்வீட் செய்கிறார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான, நெறிமுறைக்கு மாறான விஷயங்களை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் அறிவுரை வழங்குவதில்லை மாறாக உத்தரவிடுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொத்தடிமைகளாக இருக்காது. அதனால் தான் அவரை எனது ட்விட்டர் கணக்கில் இருந்து பிளாக் செய்துள்ளேன். எனக்கு ரொம்ப தொந்தரவாக இருந்தது" என்று அவர் தெரிவித்தார்.

ஆளுநர் மீது குற்றச்சாட்டு
மேலும், மாநில அதிகாரிகளின் செல்போன்களை ஆளுநர் ஒட்டுக்கேட்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். முன்னதாக நேற்றைய தினம் தான், மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு "பெகாசஸ் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைப்பேசிகளை ஒட்டுக் கேட்கிறது" என்று அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் குற்றஞ்சாட்டியிருந்தார். இப்போது 24 மணி நேரத்தில் மம்தா பானர்ஜி ஆளுநர் மீதே அதே குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

தொடர்ந்து விமர்சனம்
மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் திரிணாமுல் அரசைத் தொடர்ந்து விமர்சித்தே வருகிறார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூட அவர், "புனித பூமியான வங்காளமானது இப்போது வன்முறையில் ரத்தம் தோய்ந்து மனித உரிமைகளை மிதிக்கும் இடமாக மாறுவதை என்னால் பார்க்க முடியவில்லை. மாநிலம் ஜனநாயகத்திற்கு இடமில்லாமல் போவதாக மக்கள் கூறுகிறார்கள்" என்று சாடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications