கொரோனா தான் முக்கியம்...எளிமையாக பதவியேற்க மம்தா முடிவு
கொல்கத்தா: கொரோனா பரவல் தீரவிமடைந்து வருவதால் வெற்றி பேரணியை நிறுத்தி வைத்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எளிமையான முறையில் பதவியேற்க முடிவு செய்துள்ளார். தனது வெற்றி வங்காள மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என அவர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 219 க்கும் அதிகமான இடங்களை பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்க உள்ளார். தேர்தலில் தான் தோல்வி அடைந்தாலும், கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் இன்று காலை 7 மணியளவில் கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

இது பற்றி மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த வெற்றி வங்காள மக்களின் வெற்றி. ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. தற்போது கொரோனா பரவல் சூழலை கையாள்வதே முக்கியம். வெற்றிக் கொண்டாட்ட பேரணிகள் எல்லாம் பிறகு தான். இந்த நோய் தொற்று காலத்திலும் நமது வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. இனி தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்போம்.
நான் 221 இலக்கு நிர்ணயித்திருந்தேன். இது எனது இரட்டை சதம். மேற்குவங்கத்தில் இரட்டை இயந்திர அரசு தர உதவும் படி பிரதமர் மோடி கேட்டார். இது பாஜக.விற்கு மிகப் பெரிய தோல்வி. இனி மக்களின் முகத்தில் அவர்களால் விழிக்க முடியாது. தேர்தல் கமிஷன் உதவி இல்லாவிட்டால் பாஜக.வால் 50 இடங்களில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வெற்றி பேரணிக்கு பதிலாக பிரிகேட் பேரட் மைதானத்தில் எளிமையாக வெற்றி விழா நடைபெறும். பதவியேற்பு விழாவும் எளிய முறையில் நடத்த உள்ளோம். இன்றிலிருந்தே நான் எனது பணியை தொடங்க உள்ளேன்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும். அவ்வாறு செய்ய மத்திய அரசு தவறினால் காந்தி சிலை முன் தர்ணா போராட்டம் செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications