பிரதமரின் அறிவிப்பு மிக மிக தாமதமானது.. ஏற்கனவே பல உயிர்களை இழந்து விட்டோம்.. மம்தா சாடல்!
கொல்கத்தா: அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற பிரதமரின் அறிவிப்பு மிகவும் காலதாமதமான நடவடிக்கை என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
இந்தியாவை ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தற்போது குறைந்து ஆறுதல் அளித்து வருகிறது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய பேராயுதம் தடுப்பூசியாகும். அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி தட்டுப்பாடு
ஆனால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலை நீடித்து வருகிறது. இளைஞர்கள் பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் இருக்கும் நிலையில் அவர்களுக்கு பல்வேறு மாநிலங்கள் ஏமாற்றம் அளித்து வருகின்றன. தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பது உண்மைதான் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளிப்படையாக தெரிவித்து விட்டார்.

இலவச தடுப்பூசிகள்
அனைத்து மாநிலமும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு வருகின்றன. மத்திய அரசு தங்களுக்கு இலவசமாக தடுப்பூசி தருமாறு மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு இறுதியாக செவி சாய்த்துள்ளது. இது தொடர்பாக நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, ' மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும். தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் ' என்று தெரிவித்தார்.

முதல்வர்கள் பாராட்டு
பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் இது மிகவும் காலதாமதமான நடவடிக்கை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
|
மம்தா சாடல்
பிப்ரவரி 21 மற்றும் அதற்குப் பிறகு பல முறை, அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை கூறி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். பிரதமர் இந்த முடிவை எடுக்க 4 மாதங்கள் எடுத்துள்ளார். நாங்கள் கொடுத்த கடுமையான அழுத்தத்திற்கு பிறகு இந்த முடிவை கொண்டு வந்துள்ளார்.

இழந்து விட்டன
இந்த தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே இந்திய மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கபட்டிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக பிரதமரின் இந்த தாமதமான முடிவால் ஏற்கனவே பல உயிர்களை இழந்துள்ளது. இந்த முறை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் அரசியல் இல்லாமல் இருக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications