இன்சூரன்ஸ் பணம் ரூ. 25 லட்சத்துக்காக.. மனைவியின் உடலில் பாம்பு விஷத்தை செலுத்தி கொன்ற கொடூர கணவன்
டேராடூன்: கணவன் மனைவி இடையே பிரச்னை வருவது இயல்புதான். அவ்வப்போது அந்தப் பிரச்னை முற்றி கொலையாக மாறுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு ஆண், தன் மனைவியின் உடலில் பாம்பின் விஷத்தை ஏற்றி கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலைக்கான காரணம் தான் நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், ஜாஸ்பூர் உதய்சிங் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபம் செளத்ரி. இவரின் மனைவி சலோனி. இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 12 வருடங்களுக்கு மேலாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சலோனி உயிரிழந்தார். அப்போது முதலே சலோனியின் உயிரிழப்புக்கு சுபம் தான் காரணம் என்று அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சலோனியின் சகோதரர் அஜித் சிங் ஜாஸ்பூர் காவல்நிலையத்தில் சுபம் சிங் மீது புகாரளித்தார்.

இதுதொடர்பாக அஜித் சிங் கூறுகையில், "சமீபகாலமாக சுபம் - சலோனி இடையே பிரச்னை நிலவி வந்தது. சுபமுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் கடந்த உறவு இருந்துள்ளது. இது கணவன்,மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது சுபம் சலோனியை, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது சம்மந்தமாக இரு குடும்பத்தினரும் பலமுறை பஞ்சாயத்தும் பேசினோம். ஆனால் சுபமின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக சலோனி விவகாரத்து பெறும் முடிவில் இருந்தார். இதனிடையே கடந்த மாதம் சுபம், சலோனியின் பெயரில் ரூ.25 மதிப்பிலான இன்சூரன்ஸ் தொடங்கியிருந்தார். இதற்காக ரூ.2 லட்சம் ப்ரீமியம் தொகை கட்டப்பட்டிருந்தது.
மேலும், அந்த இன்சூரன்ஸ்க்கு தன்னுடைய பெயரை சுபம் நாமினியாக போட்டிருந்தார். இதன் காரணமாக தான் சுபம் இன்சூரன்ஸ் பணத்துக்காக எங்கள் சகோதரியை திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என்று சந்தேகப்படுகிறோம். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
ஜாஸ்பூர் காவல் நிலையத்தின் போலீஸார் கூறுகையில், "சலோனி மரணம் தொடர்பாக முதலில் நாங்கள் சந்தேக மரணம் பிரிவில் தான் வழக்குப்பதிவு செய்திருந்தோம். போஸ்ட் மார்டம் முடிவில் தான் இது கொலை என்பது உறுதியானது. அதனால் இதை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறோம்.
பிரேதப் பரிசோதனை முடிவில் சலோனியின் உடலில் பாம்பு விஷம் இருப்பது உறுதியாகியுள்ளது. இன்சூரன்ஸ் தொகைக்காக, சுபம் சலோனியின் உடலில் பாம்பு விஷத்தை ஊசி மூலம் செலுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். சலோனியின் உடல் உறுப்புகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது." என்றனர்.
முதல்கட்டமாக சுபம் செளத்ரியை கைது செய்த போலீஸ், இந்த சம்பவத்தில் அவருக்கு உடைந்தையாக இருந்தப் புகாரில் சுபமின் பெற்றோர் மற்றும் ஒருவர் மீதும் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சலோனியின் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில், கடந்தாண்டு பெண் ஒருவர் தனது காதலனை இதே பாணியில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் தன் காதலனை கொல்வதற்காக, பாம்பு பிடிக்கும் ஒருவரை பணியமர்த்தி, அவர் மூலம் தன் காதலனை நல்ல பாம்பை வைத்து கடிக்கசெய்து கொலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications