படுத்த படுக்கையான பாஜக பழங்குடி எம்எல்ஏ.. மணிப்பூரில் இவரும் தப்பல! நலம்கூட விசாரிக்காத தலைவர்கள்
இம்பால்: மணிப்பூர் வன்முறையில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த அப்பாவி மக்கள் மட்டுமின்றி ஆளும் பாஜக எம்.எல்.ஏவும் இனவெறி கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் 2 மாதங்களாக படுத்த படுக்கையில் அவதிப்பட்டு வருகிறார். யார் அவர்? என்ன நேர்ந்தது அவருக்கு? விரிவாக பார்ப்போம்.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக சார்பில் 3 முறை சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் வங்குசாஜின் வால்டே. 61 வயதான இவரால் தற்போது எந்த துணையும் இன்றி அசைய கூட முடியாது. குரலை இழந்து பேச முடியாமல் மருத்துவமனையில் தவித்து வருகிறார். குகி கிறிஸ்துவ பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர், மணிப்பூர் முதலமைச்சர் பீரேன் சிங்கிற்கு பழங்குடிகள் தொடர்பான ஆலோசகராகவும் இருந்து வந்தார்.

மணிப்பூரில் கடந்த மே 3 ஆம் தேதி தொடங்கிய குகி பழங்குடிகள் மீதான மெய்தி இனத்தவரின் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மணிப்பூரின் தான்லோன் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவரின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை இதுவரை மணிப்பூர் முதலமைச்சரோ, அமைச்சரோ, பாஜக தலைவர்களோ சந்திக்கவோ, நலம் விசாரிக்கவோ இல்லை என்கிறார் அவரது மகன் ஜோசப். அவர் கூறுகையில், "எனது தந்தை இப்போது ஒரு குழந்தை போல இருக்கிறார். அவருக்கு பேசவும் நடக்கவும் மீண்டும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
மே 4 ஆம் தேதி ஒரு கூட்டம் அவரை கொடூரமாக தாக்கியதில் படுகாயமடைந்தார். அவரது முகம் சேதமடைந்தது. அவரது தாடைக்கு பிளாட்டினம் தகட்டை மருத்துவர்கள் பொருத்தி உள்ளார்கள். அவர் எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் ஒரு டேசர் துப்பாக்கியால் தாக்கப்பட்டு மயக்கமடைந்தார். அதன் பின்னர் ஒரு கூர்மையான பொருளை கொண்டு அவரது தலையில் தாக்கி உள்ளனர். மண்டை ஓட்டில் படுகாயம் ஏற்பட்டு உள்ளது.
கூட்டம் அதிகமாக இருந்ததால், அவரது உடலின் பல உறுப்புகளிலும் காயம் ஏற்பட்டது. இது குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்றே நாங்கள் நினைக்கிறோம். எனது தந்தையையும் அவரது ஓட்டுநரையும் பல மணி நேரம் சித்திரவதை செய்து அங்கேயே விட்டுச் சென்றனர். அவர் எப்படி அங்கிருந்து தப்பி மருத்துவமனை சென்றார் என்று எனக்கு தெரியவில்லை. இது தொடர்பாக இம்பாலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது." என்றார்.
அன்று இரவே டெல்லிக்கு அழைத்து சென்றுவிட்டோம். ஓட்டுநர் 2 நாட்களில் உயிரிழந்துவிட்டார். வீட்டிற்கு செல்லும் வழியில் கோவிலுக்கு அருகே ஒரு பெரிய கூட்டம் அவரது பாதுகாப்பு குழுவை தாக்கியது. பாதுகாப்பு குழுவினரால் வன்முறை கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை. வாகனங்களை அவர்கள் அடித்து நொறுக்கினர். எம்.எல்.ஏ மற்றும் அவரது ஓட்டுநர் காயமடைந்து மயக்க நிலையில் மருத்துவமனைமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.
தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. மகன் ஜோசப், "மனைவி மற்றும் குழந்தைகள், அரசு குடியிருப்பில் இருந்தவர்கள், ராணுவ பாதுகாப்புடன் இம்பாலில் உள்ள விமான நிலையத்திற்கு விரைந்தோம். நான் இனி எப்போதும் இம்பாலுக்கு திரும்பிச் செல்ல முடியாது என்று நினைக்கிறேன். அப்பா மூலமாக எனக்கு மாநில அரசு நிர்வாகத்தில் நிறைய நண்பர்கள் இருந்தனர். ஆனால், இன்று நாங்கள் மாநில அரசுடன் தொடர்பில் இல்லை.
தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் எனக்கு தெரியவில்லை. அராம்பி டெட்டோங் என்பவர்தான் இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்தார் என தகவல் கிடைத்துள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்பு அவர்களை நான் பைக்கர் கும்பல் என்று நினைத்தேன்." என்றார். அராம்பி டெட்டோங், முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு பக்கபலமாக நிற்கும் மெய்தீ இனவாத அமைப்பு என்று கூறப்படுகிறது.
இந்த அமைப்பே இந்த வன்முறைக்கு தலைமை தாங்கியதாகவும், கிறிஸ்துவ தேவாலயங்களை அழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ. வால்டேவின் தற்போதை வீடியோவை ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டது. அந்த வீடியோவில் இருந்த எம்.எல்.ஏவின் நிலை காண்போரை கலங்க வைத்து உள்ளது.












Click it and Unblock the Notifications