கங்கையில் நீராட மறுத்த மொரீஷியஸ் பிரதமர்.. 2013 கும்பமேளாவில் என்ன நடந்தது? அகிலேசை விளாசிய யோகி
லக்னோ: கும்பமேளா நடக்கும் கங்கை ஆறு மாசுபட்டுள்ளதாக சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் நடந்த கும்பமேளாவில் மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் குளிக்க மறுத்துவிட்டு சென்றதாகவும், 2019 பாஜக ஆட்சியில் அவர் கங்கையில் குளித்த சம்பவத்தை நினைவுப்படுத்தி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 26ம் தேதி வரை உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கும்பமேளாவுக்கான பணியை உத்தர பிரதேச அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இதற்கிடையே தான் கும்பமேளா நடக்கும் கங்கை நதியின் தண்ணீர் சுத்தமாக இல்லை. மாசடைந்துள்ளது என்று அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உள்பட பிற எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கங்கை நதியின் புனித தன்மை பற்றி எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன. இந்த செயலை நிறுத்த வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் AajTak's Dharma Sansad நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது கங்கை நதி மாசடைந்துள்ளதாக கூறிய சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத் கூறுகையில்,
இரட்டை இன்ஜின் அரசின் பணியால் கங்கை நதியின் தண்ணீரின் தரம் மேம்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகையாக இருப்பவர்கள் அடுத்த 45 நாட்கள் பிரயாக்ராஜில் கங்கை நதியில் புனித நீராட உள்ளனர். நான் பலமுறை பிரயாக்ராஜுக்கு சென்றுள்ளேன். கங்கையில் நீராடி உள்ளேன். சாஸ்திரம், சடங்கின் ஒருபகுதியாக கங்கை நதியின் தண்ணீரை குடித்துள்ளேன். எனது உடல்நலம் பாதிக்கவில்லை. எனக்கு ஒருபோதும் நோய் வரவில்லை. சிலர் தவறான தகவல்களைப் பரப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டில் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாத் கும்பமேளாவில் பங்கேற்றார். அப்போது கங்கையில் புனித நீராட மறுத்துவிட்டார். அப்போது உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சி நடந்தது. கங்கை ஆற்றின் மாசுபாட்டை கண்டு அவர் திரும்பி சென்றார். இது கங்கையா? என்று கண்ணீருடன் கூறியிருந்தார். அதன்பிறகு 2019ல் வாரணாசிக்கு வந்த மொரீஷியஸ் பிரதமர் 6 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு வியந்தார். அவர் தனது குடும்பத்தினர் மற்றும் 400 பேருடன் கங்கையில் புனித நீராடினார்'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இதில் கடந்த 2013ல் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாத் கங்கையில் புனித நீராட மறுத்தபோது உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சி நடந்ததோடு, முதல்வராக அகிலேஷ் யாதவ் இருந்தார். அதன்பிறகு கடந்த 2019ல் மீண்டும் மொரீஷியஸ் பிரதமர் வந்தபோது உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்ததோடு, யோகி ஆதித்யநாத் முதல்வராக இருந்தார். இதனால் அகிலேஷ் யாதவ் ஆட்சியில் கங்கை மாசடைந்தது என்றும், பாஜக ஆட்சியில் கங்கை சுத்தமாகி உள்ளதாகவும் குறிப்பிட்டு கூறி எதிர்க்கட்சிகளை யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications