நம்ம மீடியாக்கள் செஞ்ச வேலை பாருங்க.. ஐயோ நான் "சிஎம் இல்ல, விட்டுருங்க" ஜெர்க்கான ஃபுட்பால் வீரர்
சண்டிகர்: இது அந்த ரமணா இல்ல.. வேறு ரமணா.. என்ற வார்த்தை, மீம்ஸ் உலகத்தில் ரொம்பவே பிரபலம். ஒரே பெயர் குழப்பத்தால் நெட்டிசன்கள் யாராவது தப்பாக பதிவிட்டால் இந்த மீம் சுற்றலில் விடப்படும்.
நிஜமாகவே அப்படி ஒரு தப்பு ஒரு முக்கிய பிரமுகர் விஷயத்தில் நடந்துள்ளது. ஆம்.. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கிற்கு பதிலாக, இந்திய கால்பந்தாட்ட அணி கோல் கீப்பர் அமரிந்தர் சிங்கை குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்டுள்ளன மீடியாக்கள்.
இப்போது அந்த வீரர் அதுகுறித்து விளக்கம் அளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அமரிந்தர் சிங் அமித் ஷா சந்திப்பு
காங்கிரஸ் சீனியர் தலைவர் கேப்டன் அமரிந்தர் சிங், பஞ்சாப் மாநில முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு காங்கிரஸ் தலைமையால் கேட்டுக் கொள்ளப்பட்டு, அங்கு சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக்கப்பட்டுள்ளார். இதனால், அமரிந்தர் சிங் அதிருப்தியுள்ளார். நேற்று அவர் பாஜக சீனியர் தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி ஊடகங்கள்
இந்த நிலையில்தான் சில செய்தி ஊடகங்கள் தங்கள் ட்விட்டர் பதிவில் இந்த செய்தியை வெளியிட்டபோது, கேப்டன் அமரிந்தர் சிங்கை டேக் செய்வதாக நினைத்து, கால்பந்தாட்ட வீரர் அமரிந்தர் சிங்கை டேக் செய்தன. இதை சரியாக கவனிக்காத காங்கிரஸ் ஆதரவு நெட்டிசன்களும், அமரிந்தர் சிங்கை திட்டுவதாக நினைத்து, இவரது பின்னூட்டத்தில் திட்ட ஆரம்பித்தனர். பாஜக ஆதரவு நெட்டிசன்கள், அவரை வாழ்த்தி பின்னூட்டம் செய்தனர்.

கொடுமைதான்
திடீரென தன்னுடைய மென்ஷன் டேப் நிரம்பி வழிவதை பார்த்து அதிர்ந்து விட்டால், கால்பந்தாட்ட வீரர் அமரிந்தர் சிங். ஓப்பன் செய்த பிறகுதான் என்ன கதை என்று அவருக்கு புரிந்தது. இது என்னடா சோதனையா போச்சு என்று நொந்து கொண்ட அவர், இதுபற்றி விளக்கம் அளித்து ட்வீட் செய்துள்ளார்.

கோல் கீப்பர்ங்க நானு
மீடியா, பத்திரிக்கையாளர்களே. நான் இந்திய கால்பந்தாட்ட அணி கோல்கீப்பர் அமரிந்தர் சிங். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கிடையாது. என்னை டேக் செய்யாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதன்பிறகுதான் பல மீடியாக்களும் தங்கள் தவறை புரிந்து கொண்டு திருத்தின. கேப்டன் அமரிந்தர் சிங் என்பது பஞ்சாப் மாஜி முதல்வர் ஐடி. ஆனால் அமரிந்தர் சிங் என்பது விளையாட்டு வீரர் ஐடி. இதனால்தான் அவசரத்தில் குழப்பம் நேர்ந்திருக்கிறது.

கேப்டன் அமரிந்தர் சிங்
இதனிடையே, கால்பந்தாட்ட வீரர் ட்வீட்டை ரீட்வீட் செய்த கேப்டன் அமரிந்தர் சிங், "என் இளம் நண்பனே, நான் உங்களை புரிந்து கொள்கிறேன். நீங்கள் விளையாட்டில் முன்னேற வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார். இப்படித்தான் சமீபத்தில் ஒரு பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி சேனல், நெறியாளர், சன்னி தியோல் என்று அழைப்பதற்கு பதில் சன்னி லியோன் என்று அழைத்தார். அவசரம், எல்லாவற்றுக்கும் அவசரம். அதுதான் இப்படியான நிகழ்வுக்கு காரணமாகி நகைப்புக்குரியதாக மாறிவிடுகிறது.












Click it and Unblock the Notifications