டமால் என்று எதிரொலித்த சத்தம்.. புல்வாமா சிஆர்பிஎப் முகாம் அருகே தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் திங்கள்கிழமை இரவு தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசினர், ஆனால், அதிருஷ்டவசமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிஆர்பிஎப் முகாமுக்கு அருகே கை எறிகுண்டு வெடித்தது என்று அவர்கள் தெரிவித்தனர். இது பயங்கர சத்தமாக எதிரொலித்தது. முதலில் ஏன் இப்படி ஒரு சத்தம் வந்தது என புரியவில்லை. ஆனால் பின்னர்தான் இது தீவிரவாதிகளின் செயல் என தெரியவந்தது.

"இரவு 8.30 மணியளவில் டிரால் பகுதியில் படகுண்டில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசினர்" என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் சத்தம் வந்த திசை நோக்கி, சில ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் இழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
புல்வாமாவில், 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்த வாகனத்தின்மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications