மிசோரம்: சிறுபான்மை இன வாக்குகளை குறிவைத்து செம்ம கோல் அடிக்கும் பாஜக.. கோட்டை விட்டது காங்கிரஸ்!
ஐஸ்வால்: கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மிசோரம் மாநிலத்தில் சிறுபான்மை இனங்களை குறிவைத்து பாஜக முன்னெடுத்த வியூகம் அக்கட்சிக்கு 2 எம்.எல்.ஏக்களைப் பெற்றுக் கொடுத்து ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மிசோரம் சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் மிசோரமில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்துள்ளது. பாஜகவுக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன.

தேர்தல் கணிப்புகள் பொய்யாகின: மிசோரம் தொடர்பான தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்துமே இம்மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் என கணித்திருந்ந்தன. அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கும் கணிசமான இடங்கள் கிடைக்கும் என தெரிவித்தன. ஆனால் அத்தனை தேர்தல் கணிப்புகளும் பொய்த்து போகின. பாஜகவுக்கு 1 இடம்தான் கிடைக்கும் என்றன தேர்தல் கணிப்புகள். பாஜகவோ, காங்கிரஸை விட கூடுதலாக ஒரு இடத்தில் ஜெயித்துக் காட்டிவிட்டது.
கால் பதித்த பாஜக: மிசோரம் மாநிலம் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலம். இம்மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் எப்படி பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்? என்கிற கேள்வி எல்லோராலும் எழுப்பப்பட்டது. ஆனால் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல் எம்.எல்.ஏ. பாஜகவுக்கு கிடைத்தது. புத்தா தன் சக்மா Tuichawng தொகுதியில் வென்றார். பாஜகவின் முதல் எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் நுழைந்தார். ஆனால் இந்த தேர்தலில் Tuichawng தொகுதியில் பாஜக தோல்வியைத் தழுவியது. அதே நேரத்தில் Saiha, Palak ஆகிய 2 தொகுதிகளில் வென்றுள்ளது.
சிறுபான்மை வாக்குகள்: பாஜகவின் முதல் எம்.எல்.ஏ. புத்தா த, சக்மா இனத்தைச் சேர்ந்தவர். மிசோரமில் சிறுபான்மை இனமாக சக்மாக்கள் உள்ளனர். இவர்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறவர்கள். Tuichawng தொகுதியில் கணிசமான வாக்காளர்கள். கடந்த தேர்தலில் சக்மா வாக்காளர்கள் பாஜகவை ஆதரித்தனர். இத்தேர்தலில் இன்னொரு சிறுபான்மை இனமான Maras பாஜகவை ஆதரித்துள்ளனர். Maras கிறிஸ்தவர்களில் சிறுபான்மையினர். பாஜகவின் புதிய எம்.எல்.ஏக்கள் 2 பேரும் மிசோரம் மாநிலத்தின் சிறுபான்மை இனத்தவர். அதாவது சிறுபான்மை கிறிஸ்தவர்களிடையேயும் பாஜக ஆதரவைப் பெற தொடங்கிவிட்டது என்பதுதான் மிசோரம் மாநில தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகிறது.
பாஜகவுக்கு சவால்: அதே நேரத்தில் 2018-ம் ஆண்டு பாஜக பெற்ற வாக்கு சதவீதம் இந்த முறை குறைந்திருக்கிறது. 2018-ம் ஆண்டு 8.09% வாக்குகளைப் பெற்ற பாஜக இம்முறை 5.06% வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. பாஜக மீதான கிறிஸ்தவர் எதிர்ப்பு கட்சி என்ற இமேஜை அக்கட்சி எளிதாக உடைத்துவிட முடியாத ஒரு மாநிலமாக மிசோரம் இருந்து வருகிறது. மிசோ தேசியவாதமும் கிறிஸ்தவர்களின் மதப் பிடிப்பும் இறுக்கமாகவே நீடிக்கும் மிசோரம் மாநிலத்தில் பாஜகவுக்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தின் குக்கி பழங்குடிகள் ஒடுக்கப்பட்டதும் படுகொலை செய்யப்பட்டதும் மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசியவாதத்தை வலுப்படுத்தி உள்ளது. மிசோ மக்களும் குக்கி பழங்குடிகளும் தொப்புள் கொடி உறவானவர்கள். இதனால் மணிப்பூர் பிரச்சனையின் தாக்கமும் மிசோரம் தேர்தல் களத்தில் எதிரொலித்தது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications