மணிப்பூர் 'தொப்புள்கொடி' உறவு ’குக்கி’களுக்காக கிளர்ந்தெழுந்த மிசோரம்- அணி அணியாக திரண்டு போராட்டம்!
ஐய்ஸ்வால்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனமக்கள் மீது மைத்தேயி இனமக்கள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதை தடுக்க கோரி மிசோரமில் பல்வேறு இயக்கத்தினர் இன்று ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு போராட்டம் நடத்தினர்.
மணிப்பூரில் மைத்தேயி இனக்குழுவினரால் குக்கி இனமக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக நீடிக்கும் இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

மணிப்பூரின் குக்கி இனமக்கள், மிசோரம் மாநிலத்தின் பூர்வகுடிகளான மிசோ இனமக்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்குமான உறவை போன்றது மிசோரம் மிசோ- மணிப்பூர் குக்கி இனத்தவரிடையேயான உறவு. இதனால் மணிப்பூரில் குக்கி இனமக்கள் தாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறி மிசோரமில் தஞ்சமடைந்தனர். அத்துடன் குக்கி பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மிசோரம் மாநிலத்தை விட்டு மைத்தேயி மக்கள் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அஸ்ஸாமில் உள்ள மிசோ மக்கள் வெளியேற அம்மாநில மாணவர் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இப்பின்னணியில் மிசோரம் மாநிலத்திலும் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்து வருகிறது. மிசோரம் மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று அரசு சாரா நிறுவனங்கள் சார்பாக மாநிலம் முழுவதும் மணிப்பூர் குக்கி இனமக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து பிரம்மாண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. தலைநகர் ஐய்ஸ்வாலில் பெரும் எண்ணிக்கையில் அணி அணியாக மிசோ இனக்குழுவின் உடைகளை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இதேபோல மிசோரம் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இப்போராட்டங்களின் போது மைத்தேயி இனமக்கள் வசிக்கும் இடங்களில் அசம்பாவிதங்கள் நிகழாத வகையில் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. குக்கி இனமக்கள் மீதான தாக்குதல்களால் மிசோரமில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
மிசோரம் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் குக்கி இனமக்கள் மீதான தாக்குதல் விவகாரம், மத்திய அரசின் கனத்த கவுனம் ஆகியவை சட்டசபை தேர்தலிலும் தீவிரமாக எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

#WATCH | Mizoram | Locals in Aizawl protest over the Manipur issue. pic.twitter.com/0WfPWm5PMl
— ANI (@ANI) July 25, 2023












Click it and Unblock the Notifications