பாஜக கை விட்டு நழுவுகிறதா மத்திய பிரதேசம்.. ஆர்எஸ்எஸ் உதவியை கேட்ட மோடி, அமித்ஷா?
போபால்: மத்திய பிரதேச மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிர்ப்பு அதிகம் இருந்ததால் கடைசி நேரத்தில் மோடியும் அமித்ஷாவும் ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி ஒரே கட்டமாக 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற 75.63 சதவீத வாக்கு சதவீதத்தை விட 0.59 சதவீதம் தாண்டியது. மபியில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல், பாஜக மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் 3 முறை வெற்றி பெற்று உள்ளது. காங்கிரஸ் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு மீது நிலவிய எதிர்ப்பு அலை, இந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளது. தொடக்கத்தில் அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் பதற்றமான நிலையில் இருந்து உள்ளனர். முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேச அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அலையின் தாக்கத்தை அவர்கள் ஆழமாக உணர்ந்தனர். இதனை அடுத்து மூத்த நிர்வாகிகள் இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்.
மத்திய பிரதேசத்தில் தேர்தல் போட்டி கடுமையாக இருப்பதை உணர்ந்த பாஜகவின் உயர்மட்ட நிர்வாகிகள், வாக்காளர்களை கவர அவசர அவசரமாக அறிவிப்புகளை வெளியிடாமல் பல்வேறு யுக்திகளை கையில் எடுத்தனர். பாஜகவின் ஒரு முக்கிய நிர்வாகி தனியார் ஆங்கில தொலைக்காட்சியிடம் தெரிவிக்கையில், "ஆரம்பத்தில், மத்திய பிரதேச பாஜக தொண்டர்கள் சோர்வுடன் காணப்பட்டனர். இதனால் அடிமட்ட தொண்டர்கள் அலட்சியமாக இருந்தார்கள். ஆனாலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் சவால்களை முன்கூட்டியே கணித்து, நிலைமையை மதிப்பிட மத்திய தேர்தல் குழு (சிஇசி) கூட்டத்தை கூட்டினர். மற்ற கட்சிகளை விட ஒரு மாதம் முன்னதாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். இது மத்திய பிரதேசத்தில் சோர்வடைந்த பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. பிரதமர் மோடியும் அமித்ஷாவும் களத்தில் உள்ள பிரச்சினைகளை கையில் எடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை ஒன்று திரட்டினர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முயற்சிகள் மத்திய பிரதேசத்தில் பாஜகவின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்த உதவியது.
உள்ளூர் கட்சி தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது. இத்தகைய முயற்சிகள் பாஜகவை மத்திய பிரதேச தேர்தல் களத்தில் மீண்டும் வலுவான கட்சியாக நிறுத்தியது," என்றார். அதேபோல் தேர்தல் வரை மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை பாஜக தலைமை புரிந்து கொண்டு செயல்பட்டதாக அக்கட்சியின் மற்றொரு முக்கிய நிர்வாகி அந்த தொலைக்காட்சியிடம் தெரிவித்து உள்ளார்.

"வேட்பாளர் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கட்சியினரிடம் எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக பாஜக வெற்றி பெற வாய்ப்பு குறைவாக உள்ள இடங்களில் யாரை நிறுத்துவார்கள் என்ற கேள்வி இருந்தது." என்றார். பாஜக தேர்தல் களத்தில் ஏராளமான மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை இறக்கி வியூகங்களை வகுத்து களம் கண்டது. இதற்கு மாநிலத் தலைமையும் உடன்பட்டது.
இதனால் மபியில் அடிமட்டம் முதல் நட்சத்திர பேரணிகள், பொதுக்கூட்டங்கள் வரை மக்களை சென்றடைந்தது பாஜக. மபியில் மாநில மற்றும் மத்திய பாஜக அரசு செய்திருக்கும் திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குகளை சேகரித்தது. இதன் மூலம், மக்களின் நம்பிக்கையை பாஜக மீண்டும் பெற உதவியதுடன், காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications