நேதாஜி மரணம் பற்றி ஆவணங்கள்: பிரதமர் அலுவலகம் வெளியிட மறுப்பு
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்தான ஆவணங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில் உள்ள சில விஷயங்கள் அயல்நாடுகளுடனான உறவுகளை பாதிக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுதந்திரத்துக்கு முன்பே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதுதொடர்பான ஆவணங்களை வெளியிட அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் மறுத்து வருகின்றன. நேதாஜி குடும்பத்தினரின் வேண்டுகோளையும் நிராகரித்து வருகின்றன.

இந்நிலையில், முந்தைய அரசுகளைப் போல், தற்போதைய மோடி அரசும், நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட மறுத்துள்ளது.
சுபாஷ் அக்ரவால் என்பவர், பிரதமர் அலுவலகத்திடம் இந்த ஆவணங்களை கேட்டு, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தார். ஆவணங்களை வெளியிடுவதில் பொது நன்மை அடங்கி இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.
ஆனால், அவரது வாதத்தை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது. ஆவணங்களை வெளியிடுவதில், பொது நன்மை எதுவும் இல்லை என்றும், அவற்றை வெளியிட முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
‘வெளிநாட்டுடனான உறவை பாதிக்கக்கூடிய தகவல்களை வெளியிடாமல் மறைக்கலாம்' என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டி உள்ள பிரதமர் அலுவலகம், அந்த காரணத்தாலேயே ஆவணங்களை வெளியிட முடியாது என்று கூறியுள்ளது. ஆனால், எந்த நாட்டுடனான உறவு பாதிக்கப்படும் என்ற விவரத்தை வெளியிடவில்லை.
ராஜ்நாத்சிங்
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, அப்போது பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், நேதாஜியின் மரணத்தைப் பற்றிய மர்மத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட வேண்டும் என்றும், "ஒட்டுமொத்த நாடும் நேதாஜியின் மரணம் பற்றி அறிய பொறுமையின்றி காத்திருக்கிறது" என்று அப்போது ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
பாஜக அரசு மறுப்பு
ஆனால், இப்போதைய மறுப்பு, தகவலுரிமைச் சட்டத்தின் கீழ் சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் 15 மாதங்களுக்கு முன்பு செய்த மனுவிற்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவணங்கள் வெளியாகுமா?
1953 முதல் 2,000ஆம் ஆண்டு வரை உருவாக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியலை அளித்தது மத்திய அரசு. ஆனாலும் நேதாஜி மறைவு பற்றிய மர்மத்திற்கான காரணங்கள் என்னவென்பதை வெளிப்படுத்தும் மற்றும் நீதிபதி முகர்ஜி கமிஷன் விசாரணை அறிக்கை உள்ளிட்ட பல விசாரணைகள் அடங்கிய 21 ஆவணங்கள் உள்ளன. இது தவிர 10 ஆவணங்கள்‘வெளியிடத் தகுந்தவை' என்றே குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்த ஆவணங்கள் பற்றிய உள்விவரங்களையும் பிரதமர் அலுவலகம் வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளது.
நேதாஜியின் உடல்
வெளியிட முடியாத ஆவணங்களில் ஒன்று, 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் ஜப்பான் ரன்கோஜி கோயில் ஒன்றில் நேதாஜியின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது பற்றியது.
நேதாஜி பற்றிய விவரங்களை வெளியிட்டால் அயல்நாட்டு உறவுகள் பாதிக்கும் என்று கூறியுள்ள பிரதமர் அலுவலகம், எந்தெந்த அயல்நாடுகள் என்பதைக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக அரசின் கொள்ளை
பாஜக அரசு ஏற்கெனவே, சீனாவுக்கு எதிரான 1962-ஆம் ஆண்டு போர் குறித்த ஹெண்டர்சன் புரூக்ஸ்-பகத் அறிக்கையின் விவரங்களையும் வெளியிட மறுத்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல் நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட மறுத்ததிலும் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கையையே தேசிய ஜனநாயகக் கூட்டணியும் கடைபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications