மோடி அரசு அதிரடியாக அறிவித்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு- 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு தகருமா?
சென்னை: தமிழ்நாட்டின் நீண்ட நெடுங்கால கோரிக்கைதான் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்பது. தற்போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய கூட்டணி அரசு அறிவித்திருப்பதன் மூலம் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பு தகர்க்கப்பட்டு ஜாதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியில்தான் 1931-ம் ஆண்டு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது கல்வி, வேலைவாய்ப்பில் ஒடுக்கப்பட்ட- தாழ்த்தப்பட்ட- பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் எடுக்கப்பட்ட ஜாதிவாரியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் நாடு விடுதலை அடைந்த பின்னரும் மேலே குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல; இடஒதுக்கீடு என்பது உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமை என்ற புரிதலும் நிலைநிறுத்தப்பட்டது. இதனை உறுதி செய்ய இந்திய அரசியல் சாசனத்தில் முதலாவது திருத்தம் கொண்டுவர போராடியதும் தந்தை பெரியாரும் தமிழ்நாடு மண்ணும்தான்.

தற்போது நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட- பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு என்பது 50% என்ற அளவில்தான் உள்ளது. உச்சநீதிமன்றம்தான் இந்த இடஒதுக்கீடு உச்சவரம்பை நிர்ணயித்தது. ஆனால் சமூக நீதியின் தாய்நிலமான தமிழ்நாட்டில் 1990களிலேயே 69% இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டுவிட்டதால் இதில் இதுவரை யாரும் கை வைக்க முடியவில்லை.
இருந்த போதும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ஜாதிகளின் எண்ணிக்கைக்கேற்ப- உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நீண்டகால கோரிக்கை. 2011-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்திய போது ஜாதிய விவரங்களையும் கணக்கெடுத்தது. ஆனால் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பில் குழப்பங்கள் இருப்பதாக கூறப்பட்டதால் இது கிடப்பிலேயே போடப்பட்டது.
அண்மைக்காலமாக பீகார், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஜாதிவாரியாக சர்வே ஒன்று நடத்தி தங்களது மாநிலத்தில் இதனடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முனைந்தன. ஆனாலும் உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு முட்டுக்கட்டை போட்டு வந்தது. இதனால் தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் அரசு, ஒரே முடிவாக, மத்திய அரசுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்களும் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டை அமல்படுத்த முனைந்த மாநிலங்களில் முன்னணி மாநிலமாக இருந்தது பீகார். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் இதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. தற்போது பீகார் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், மத்திய அரசு திடீரென ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்ததுடன், மாநில அரசுகள் தனித்தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் தேவை இல்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு.
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விவரங்கள் வெளியிடப்படும் போது தற்போதைய நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு தலைகீழாக மாற்றமடையும். குறிப்பாக உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50%தான் என்கிற முட்டுக்கட்டை தகர்க்கப்பட்டுவிடும். ஒடுக்கப்பட்ட- பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல முற்படுத்தப்பட்டவர்களாக கூறப்படும் ஜாதியினரும் எத்தனை சதவீதம் பேர் என்கிற புள்ளி விவரங்கள் அம்பலத்துக்கு வந்துவிடும்.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு மாநிலங்களில் கல்வி வேலைவாய்ப்பில் 50%-க்குள்ளும் மத்திய அரசு பணிகளில் வெறும் 27%-மும் என கிடைத்துவந்த இடஒதுக்கீடு அதிகமாகக் கூடிய வாய்ப்பு உள்ளது. அத்துடன் ஜாதிவாரி எண்ணிக்கை அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் போது பொதுப்பட்டியல் என்ற போர்வையில் உயர்ஜாதியினர் மட்டுமே ஏகபோகமாக அனுபவித்து வரும் சொகுசு கோட்டாவும் ஒழிந்து போய்விடும் என்பதும் எதிர்பார்ப்புதான். ஆகையால் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எந்த கட்சிக்கு எந்த கூட்டணிக்கு வெற்றி என கொண்டாடுவதைவிட்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைவாக நடைமுறைப்படுத்துவதும் அதனடிப்படையில் இடஒதுக்கீட்டில் உரிய பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது குறிக்கோளாகவும் இருக்க வேண்டும் என்கின்றனர் சமூகநீதி கோட்பாடு ஆதரவாளர்கள்.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications