காஷ்மீர் விவகாரம்: டெல்லி ஐ.நா. அலுவலகத்தை காலி செய்ய மத்திய அரசு திடீர் உத்தரவு!
டெல்லி: காஷ்மீர் எல்லை விவகாரத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு அமைப்பின் டெல்லி அலுவலகத்தை காலி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு திடீர் என உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி அமைதியை நிலைநாட்டும் திட்டத்தின் கீழ் UNMOGIP - யுஎன்எம்ஓஜிஐபி உருவாக்கப்பட்டது.

1949-ஆம் ஆண்டு உடன்படிக்கையின் கீழ் பாகிஸ்தான் - இந்தியா இடையேயான யுத்த நிறுத்த எல்லைக் கோட்டை மேற்பார்வையிடும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதன் அலுவலகம் டெல்லியில் செயல்படும் வகையில் புராண கிலா சாலைப் பகுதியில் சுமார் 7 ஆயிரம் சதுர அடியில் அரசு பங்களா 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஐ.நா. சபை மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
இந் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, யுஎன்எம்ஓஜிபியின் டெல்லி அலுவலகத்தை காலி செய்யுமாறு திடீர் என்று உத்தரவிட்டுள்ளது. "யுஎன்எம்ஓஜிஐபி அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. சிம்லா ஒப்பந்தம், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு போன்றவற்றால் இந்த அமைப்புக்கான வேலை குறைந்துவிட்டது.
மேலும், பொருத்தமான செயல்பாடுகளை யுஎன்எம்ஓஜிஐபி மேற்கொள்ளவில்லை' என்று ஐ.நா.வுக்கு மத்திய அரசு அண்மையில் அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.












Click it and Unblock the Notifications