For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று முதல் அனைவருக்கும் வங்கிக் கணக்கு- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

சென்னையில் நடைபெறும் இதற்கான விழாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா' (பிரதமர் மக்கள்-நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். இத்திட்டம் நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை நோக்கமாக கொண்டது.

modi

இந்த திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7.5 கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதேபோல் நாடு முழுவதும் மாநில தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய மாவட்ட தலைநகரங்களிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ‘ஆதார்' அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதை வைத்து நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் வழங்கப்படும். ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கி கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழகத்தில்...

தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்து, பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதை அமல்படுத்துவதற்கான சில வழிமுறைகளை அங்கீகரிக்கவும் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த திட்டத்தின் இயக்குனராக, தேசிய ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் திட்ட இயக்குனரை மத்திய அரசு நியமித்துள்ளது. மாநில அளவில் இந்த திட்டத்தில் பணியாற்றுவதற்கான மூத்த அதிகாரிகளின் பட்டியலை, திட்ட இயக்குனர் தயாரிப்பார். மாநில அளவிலான வங்கிகள் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் இதில் இடம் பெறுவார்.

மாநில அமலாக்க குழு

அதோடு, மாநிலத்தின் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ், வருவாய், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளின் செயலாளர்கள், மாநில அளவிலான அமலாக்க குழுவில் உறுப்பினராக நியமிக்கப்படுகின்றனர்.

இந்த திட்டம், மாவட்டங்களில் அதற்கான நபார்டு வங்கியின் எல்.டி.எம். அதிகாரிகளால் 28-ந் தேதி தொடக்கிவைக்கப்படும். அப்போது, மாவட்ட அளவில் நடக்கும் நிகழ்ச்சியில் கலெக்டர்கள் பங்கேற்க வேண்டுமென்றும், திட்டம் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகளை அவர்கள் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் ஆதரவு

இந்த திட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு தமிழக அரசு தேவையான ஆதரவை கொடுக்கும். மாநில அரசுத் துறைகளின் திட்டங்களின் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு அதற்கான தொகை உடனுக்குடன் அனுப்பப்படும். இந்த திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ருபே கிஷான் அட்டைகளை வழங்குவதற்கு கூட்டுறவு வங்கிகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

English summary
Prime Minister Narendra Modi is launching Jan Dhan Yojana, a mega financial inclusion plan under which bank accounts and RuPay debit cards with inbuilt insurance cover of Rs 1 lakh will be provided to crores of persons with no access to formal banking facilities today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X